திருச்சி சமயபுரம் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலம்.!!

திருச்சி சமயபுரம் கோவில் பூச்சொரிதல் திருவிழா மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது இந்த பூச்சொரிதல் திருவிழா தொடர்ந்து ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் தமிழகத்தில் உள்ள அனைத்து பக்தர்களும் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு வழிபட்டனர். சிவன், பிரம்மா, விஷ்ணு என்னும் மும்மூர்த்திகளால் ஸ்ரீரங்கம் கோயிலின் ஈசான பாகத்தில் இச்சா, கிரியா, ஞானசக்தி வடிவம் கொண்டு சிருஷ்டிப்பட்டதால் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலிலும் ஸ்ரீரங்கம் திருக்கோயிலின் மூலவரைப் போன்றே சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 இயந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் இத்தலத்தில் மகாமாரியம்மன் அருள் பாலிப்பது தனிப்பெரும் சிறப்பாகும்.
அம்மனின் சுயம்பு திருமேனியில் நவகிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவகிரகங்களை நவ சர்ப்பங்களாக திருமேனியில் தரித்து அருள் பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவகிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.இத்தலத்தில் இருக்கும் அம்மனை அமாவாசை, பெளர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிப்படுவது சிறப்பு. மேலும் இத்தலத்தில் வழிபட்டால் ராகு, கேது திசை தோஷம் நிவர்த்தியாகும் என்பதற்கு திருக்கோயிலின் மேற்கூரையில் சிற்பச்சான்றும் உள்ளது. மேஷம் – மீனம் வரையிலான பன்னிரு ராசிகளின் அதிபதியாக அம்மன் ஆட்சி புரிகிறாள் என்பதற்கும், மேற்கூரையில் சிற்பச்சான்றுகள் உள்ளன.
மேலும் தட்சன் யாகத்திற்கு சென்ற தாட்சாயணியை தூக்கி சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடிய போது அம்மனின் திருக்கண் இப்பகுதியில் விழுந்தததால் இத்தலத்திற்கு கண்ணனூர் என்ற பெயர் புராண காலந்தொட்டே இருந்து வருகிறது. மிகத் தொன்மையான உற்சவ அம்மனின் திருமேனியில் இன்றும் ஆயிரம் திருக்கண்கள் உள்ளன. இது இத்திருத்தலத்தின் புராண பெருமையை விளக்குவதாக அமைந்துள்ளது.
இத்திருத்தலத்தில் அம்மன் அஷ்டபுஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோயிலிலும் காணக் கிடைக்காத அரிய காட்சியாகும். மேலும் மாரியம்மன் வடிவங்களில் ஆதி பீடம் சமயபுரமே ஆகும்.
இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள மகாமாரி பதம் மாறி சிவபதத்தில் மிகப் பெரிய சுதை திரு உரு உருவமாக விக்ரம சிம்மாசனத்தில் ஆயிரம் கோடி சூரிய பிரகாக சத்துடன், தங்கத் திருமுடியுடன், குங்கும நிறமேனியில் நெற்றியில் வைரப்பட்டை ஒளி வீச, வைரக் காதணி, வைர மூக்குத்தி சூரிய சந்திரனைப் போல் ஜொலித்து கண்களில் அருள் ஒலி பாலித்து, அன்னைக்கு அன்னையாய் ஆதி முதல் ஆதார சக்தியாய் நாடி வருவோர் மட்டுமின்றி நாடு தழைக்கவும், மண்ணுலக உயிர்களை காக்கவும் மாதுளம் மேனியாய், மஞ்சள் உடை உடுத்தி வாசனை மலர்களை திருமேனி முழுவதும் தரித்து காட்சியளிக்கிறாள்.
பச்சை பட்டினி விரதம்
இதனிடையே இத்திருத்தலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லாவிதமான நோய்களும், தீவினைகளையும் அணுகாது, சகல சௌபாக்கியங்களும் கிடைக்க மரபு மாறி அம்மனே பக்தர்களுக்காக 28 நாள்கள் பச்சை பட்டினி விரதம் வருடந்தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை இருப்பது இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
இந்த 28 நாள்களில் திருக்கோயிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவு, நீர் மோர், கரும்பு பான கம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக செய்யப்படுகிறது.
பூச்சொரிதல் விழா
விக்னேஸ்வர பூஜை , புண்ணியாக வாஜனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் பூஜைகளோடு இன்று காலை 7.15 மணிக்கு மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு, பூஜைகளுக்கு பிறகு திருக்கோயில் இணை ஆணையர் சி. கல்யாணி தலைமையில் பக்தர்கள் பூதட்டுகளுடன் ஊர்வலமாக திருக்கோயிலை வலம் வந்து, அம்மனுக்கு பூக்கள் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூக்கள் கொண்டு வந்தனர்.
பூச்சொரிதல் விழாவிற்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையில் ஏடிஎஸ்பிக்கள், டி.எஸ்.பிக்கள் என 1300 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.