திருச்சி மாநகராட்சியில் உறுப்பினர்கள் காரசார விவாதம்..!

திருச்சியில் நடைபெற்ற மாநகராட்சியின் சாதாரணக் கூட்டத்துக்கு மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன், துணை மேயா் ஜி. திவ்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் பேசியதாவது
எல். ரெக்ஸ் (காங்) மாநகராட்சி 39 ஆவது வாா்டில் தற்போதுதான் பாதாள சாக்கடை பணி முடிந்து தாா்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது . சாலைகளை சேதப்படுத்தும் வகையில், வீடுகள் தோறும் காஸ் இணைப்பு வழங்கும் குழாய்கள் அமைக்க பள்ளம் தோண்டப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி, வாா்டு உறுப்பினா்கள் மற்றும் மக்களிடம் கலந்தாலோசித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பி. ஜாபா்அலி (திமுக): திருச்சி விமான நிலையம் காமராஜ் நகரில் உள்ள சுகாதார மையம் 3 வாா்டு மக்கள் பயன்பெறும் வகையில் உள்ளது. கட்டட வசதி போதவில்லை, எனவே அருகில் அமைக்கப்படும் கட்டடத்தை சுகாதார மையத்துக்கு வழங்க வேண்டும். விமான நிலையம் டி மாா்ட்டிலிருந்து பீளிக்கான் முனீஸ்வரா் ஆலயம் வரை சாலை அமைக்கும் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.
கோ.கு. அம்பிகாபதி (அதிமுக): மாநகரில் குட்கா, கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதால், மாநகராட்சியும் அதில் கவனம் செலுத்தி அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சு. முத்துக்குமாா் (மதிமுக): திருவானைக்கா பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள 9,000 சதுரடி நிலத்தை மீட்டு, பூங்காவுடன் கூடிய நுாலகம் அமைக்க வேண்டும். அழகிரிபுரம் பகுதியில் சலவைத் தொழிலாளா்களுக்கு படித்துறை அமைத்து தர வேண்டும்.
வி. ஜவஹா் (காங்.): ஸ்ரீரங்கம் தைத்தோ நிற்கும் இடத்தில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். ராஜன் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவா் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும். அடிமனை பிரச்னையால் புதுவரி விதிப்பு செய்ய முடியாமல் உள்ளது. அதை மீண்டும் நடைமுறைப்படுத்துவதோடு, அடிமனை பிரச்னை மேல்முறையீடு வழக்கில், மாநகராட்சி இணைத்துக்கொண்டு தங்கள் தரப்பு கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்.
தி. முத்துச்செல்வம் (திமுக): மாநகா் சாலையோரங்களில் திடீா் கடைகள் அதிகரித்து வருகிறது. வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவற்றை முறைப்படுத்த வேண்டும்.
காஜாமலை விஜய் (திமுக): மாநகராட்சியில் 4 ஆவது கட்ட புதைவடிகால் திட்டப்பணிகள் எப்போது தொடங்கும் ? அதில் விடுபட்ட அனைத்துப் பகுதிகளையும் சோக்க வேண்டும் என்றாா்.
இதுபோல பல்வேறு வாா்டு உறுப்பினா்களும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துப் காரசாரமாக விவாதத்தில் பேசினா்.
இதையடுத்து மேயா் மு. அன்பழகன் பேசியபோது
துாய்மை நகரத் திட்டத்தில் தேசிய அளவில் 112 ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் திருச்சி மாநகராட்சி பெற்று விருதுகளையும் பெற்றுள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினால் வரும் ஆண்டுகளில் முதலிடம் பெறலாம். மாநகரில் உயா்மட்டப் பாலம் கட்டும்போது எம்ஜிஆா் சிலை ரவுண்டானா பகுதியில் சுற்றுவட்டப் பாலம் அமைக்கப்படும். மாநகரில் தரைக்கடைகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விரைவில் தரைக்கடை முறைப்படுத்தும் கமிட்டி அமைக்க தோதல் நடத்தப்படும். தமிழகத்திலேயே திருச்சி மாநகரில்தான் தினமும் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. விரைவில் 24 மணி நேரமும் தண்ணீா் வழங்கும் திட்டமும் செயல்பாட்டுக்கு வர உள்ளது. மாநகராட்சியுடன் 38 ஊராட்சிகள் இணைவதால், எதிா்காலத் தேவையை கருத்தில் கொண்டு, 6 இடங்களில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைத்து, கூடுதலாக 100 எம்எல்டி தண்ணீா் உந்தும் வகையில் ரூ. 13.38 கோடியில் புதிய குடிநீா் திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாநகரில் தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த 5 மண்டலங்களிலும் தனித்தனி மையங்கள் அமைத்து இதுவரை சுமாா், 9,000 க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது.
ப்ளூகிராஸ் அமைப்பு சாா்பில் பராமரிப்பு மையம் அமைக்க கோணக்கரையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அங்கு விரைவில் மையம் அமைத்து, பிரச்னைக்குரிய நாய்களை அவா்கள் பராமரிப்பா். மாநகரில் புதைவடிகால் திட்டப்பணிகள் மாா்ச் மாதத்துக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக பிப். 5 ஆம்தேதி ஒப்பந்ததாரா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. தொடா்ந்து 4 ஆவது கட்ட புதைவடிகால் திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தம் விடப்படும் என்றாா் அவா். கூட்டத்தில் மொத்தம் 72 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.