குஜராத்தையே உலுக்கிய சோகம்: மோர்பி தொங்கும் பாலம் அறுந்து விழுந்து கோர விபத்து- 132 பேர் பலி; 100 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை…

காந்தி நகர்: குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளது. கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 132 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

தண்ணீருக்கு உள்ளே 100க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதனால் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் குஜராத்தை உலுக்கி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கிரிமினல் வழக்கு பதியப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக கமிட்டி ஒன்றும் உருவாக்கப்பட்டு உள்ளது. குஜராத்தில் தேர்தல் நேரத்தில் நடந்துள்ளது இவ்வளவு பெரிய விபத்து மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படித்தி உள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் வெளியாகி உள்ளன. முதல் வீடியோவில் சில இளைஞர்கள் பாலத்தின் அதுவே ஜம்ப் செய்யும் காட்சிகள் பதிவாகி உள்ளன. அவர்கள் வேண்டும் என்றே குதித்து பாலத்தை ஆட்டும் காட்சிகள் பதிவாகி உள்ளன. அதேபோல் பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் அவர்கள் கால்களால் உதைக்கும் காட்சிகளும் பதிவாகி உள்ளன. பாலத்தை சேதப்படுத்தும் நோக்கில் இவர்கள் நடந்து கொண்டுள்ளனர்.

இன்னொரு வீடியோவில் பாலத்தின் நடுப்பகுதி முழுமையாக கீழே மூழ்கும் முன் அதில் மக்கள் தொற்றிக்கொண்டு இருக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. காப்பாற்றுங்கள்.. காப்பற்றுங்கள் என்று இவர்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் கதறும் காட்சிகள் இதில் பதிவாகி உள்ளன. இப்படி தொற்றிக்கொண்டு இருந்தவர்களில் பலர் நீரில் மூழ்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. முழு பாலமும் தற்போது நீரில் மூழ்கிவிட்டது. பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் உள்ள நுழைவாயில் மட்டுமே வெளியே உள்ளது.

காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று மக்கள் நீரில் மிதிக்கும் வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. தற்போது அங்கு படகு மூலம் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் களமிறங்கி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 100க்கும் மேற்பட்டோரின் உடல்கள் உள்ளே மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இவர்களை தேடும் பணி நேற்று இரவில் இருந்து நடந்து வருகிறது. ராணுவ, கடற்படை ஆகியவையும் இந்த தேடுதல் வேட்டையில் களமிறக்கப்பட்டு உள்ளது.