குஜராத்தில் ராணுவ போர் விமான தொழிற்சாலை – அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..!

மிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தில் விரைவில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் வதோதராவில் ராணுவ விமானத் தொழிற்சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்திய விமானப் படையில் ராணுவ உபகரணங்கள் மற்றும் வீரர்களின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்த ஆவ்ரோ 748 ரக விமானங்களை மாற்றவும், அதற்கு பதிலாக ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து சி-295 சரக்கு விமானங்களை வாங்கவும் அரசு முடிவு செய்தது. 21 ஆயிரம் கோடி ரூபாயில் 56 விமானங்களை வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு செப்டம்பரில் கையெழுத்தானது.

இதன்படி, 16 விமானங்கள் ஸ்பெயினில் இயங்கும் ஏர்பஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, செப்டம்பர் 2023 முதல் 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். மீதமுள்ள 40 விமானங்கள் குஜராத் மாநிலம் வதோதராவில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையில், டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஏர்பஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. உலக அளவில் 12வது நாடாக இந்தியாவுடன் இணைந்தும் உற்பத்தியை தொடங்குகிறது. 2031ஆம் ஆண்டுக்குள் 40 விமானங்களும் தயாரிக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

இவற்றை தயாரிக்க வதோதராவில் அமைக்கப்பட உள்ள தொழிற்சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.அதைத் தொடர்ந்து, ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின்கீழ் விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் தளவாடங்களின் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். பின்பு, நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, 2025ஆம் ஆண்டுக்குள் நமது பாதுகாப்புத்துறை உற்பத்தி அளவு 25 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என்றும், தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தில் அமைக்கப்பட உள்ள பாதுகாப்பு தொழில் வழித்தடம் அதற்கு ஆதாரமாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி.