திருமண விழாவிற்கு சென்ற போது நடந்த சோகம்… உத்தரகாண்ட்பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பஸ்… உயிரிழந்த பயணிகளின் எண்ணிக்கை 33-ஆக அதிகரிப்பு..!!

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் உயிரிழந்த பயணிகளின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.

உத்தராகண்டின் மலை மாவட்டமான பவுரிகல்யாணில் திருமண விழாவில் பங்கேற்பதற்காக 52 பேர் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த பேருந்து சிந்து என்ற கிராமத்தின் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கிற்குள் கவிழ்ந்தது. மலை முகட்டில் இருந்து பலமுறை உருண்ட பேருந்து 2 ஆயிரம் அடி பள்ளத்தில் மோதியது. பயணிகளின் அபாய குரலை கேட்ட மலைவாழ் மக்கள், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக நிகழ்விடத்திற்கு சென்ற உத்தராகண்ட் பேரிடர் மேலாண் படையினர், கயிறு மூலம் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் விபத்தில் உடல் நசுங்கியும், மருத்துவமனை கொண்டு செல்லப்படும் வழியிலும், 25 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன்தராமல் மேலும் 8 பேர் உயிரிழந்துவிட்டனர். இதையடுத்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்திருக்கிறது. படுகாயமடைந்துள்ள 19 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து உத்தராகண்ட் காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.