காணும் பொங்கலையை ஒட்டி கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்..!

கோவை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- காணும் பொங்கலை ஒட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) கோவையில் மக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகளான ,சுங்கம், உக்கடம் , பேரூர் சாலை பகுதிகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை வாகனம் நிறுத்த வசதி மற்றும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வாலாங்குளத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சுங்கம் பஸ் டிப்போ வின் பின்புறம் உள்ள வடக்கு கரை பகுதியில் நிறுத்த வேண்டும். டி.பி சாலை பகுதிக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாஸ்திரி மைதானம் மற்றும் மாநகராட்சி வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்திக் கொள்ளலாம். உக்கடம் பெரிய குளத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை உக்கடம் காவல் நிலையத்துக்கு எதிர்ப்புறம் உள்ள புதிய மேம்பாலத்துக்கு அருகில் எச்.எஸ் காலனி பகுதியில் உள்ள இடங்களில் நிறுத்திக் கொள்ள வேண்டும். கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் வாகனங்கள் திருச்சி சாலை, சிங்காநல்லூர் வழியாக ராமநாதபுரம் சந்திப்பில் இருந்து நஞ்சுண்டாபுரம் சாலை|சுந்தராபுரம் வழியாக பாலக்காடு செல்ல வேண்டும். திருச்சி சாலையில் இருந்து புட்டு விக்கிவழியாக திருச்சி செல்லும் வாகனங்கள் குனியமுத்தூர் ஆத்துப்பாலம் ‘போத்தனூர் நஞ்சுண்டாபுரம் வழியாக ராமநாதபுரம் திருச்சி சாலை சந்திப்பை அடைய வேண்டும். புட்டு விக்கியிலிருந்துகோவை மாநகருக்குள் வரும் கனரக வாகனங்கள் சேதுமா வாய்க்கால் சோதனை சாவடி ,சிவாலய சந்திப்பு ராமமூர்த்தி ரோடு வழியாக காந்தி பார்க்க அடைந்து செல்ல வேண்டும். மேலும் டி.பி. ரோட்டில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெறுவதையொட்டி சூழ்நிலைக்கேற்றவாறு டிபி. சாலை ரவுண்டானாவில் இருந்து போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.