அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்… நான் சொல்றதை கேளுங்க.. ஸ்டாலின் கொடுத்த ‘க்ளீயர்’ மெசேஜ் வேற லெவல்..!

சென்னை : நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சிகளுக்கு ஒரு ‘க்ளீயர்’ மெசேஜை கொடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

காங்கிரஸ் அல்லாத கூட்டணி கரை சேராது, தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்துக் கொள்கிறோம் என்பதும் நடைமுறைக்கு ஒவ்வாதது என காங்கிரஸ், ஆர்ஜேடி, சமாஜ்வாடி கட்சிகளின் தலைவர்களை மேடையில் வைத்துக் கொண்டு, அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா நேற்று மாலை சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தப் பொதுக்கூட்ட மேடையை 2024 தேர்தலுக்கான ‘ப்ளூ பிரிண்ட்’டை வெளியிடும் மேடையாகவே பயன்படுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் இணைய வேண்டும் என்பது திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் கருத்தாக இருக்கிறது. ஆனால், தேசிய அளவில் இந்த கருத்தை பல தலைவர்கள் ஏற்காமல் இருந்து வருகின்றனர். பாஜகவை எதிர்த்தாலும் கூட, காங்கிரஸ் கூட்டணியில் சேராமல் தனித்து நிற்பதால், அக்கட்சிகள் பாஜகவுக்கு சாதகமான விளைவையே தேர்தல் அரசியல் களத்தில் ஏற்படுத்துகின்றன என விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பல தேர்தல் முடிவுகள் உதாரணமாக இருந்திருக்கின்றன.

முன்னுக்குச் சென்றால் கடிக்கும், பின்னுக்கு வந்தால் உதைக்கும் என்ற கதையாக தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற தலைவர்கள் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை ஏற்க மறுத்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியும், பல விஷயங்களில் விட்டுக்கொடுக்காமல் அடம்பிடித்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பாஜகவை கடுமையாகத் தாக்கிப் பேசி வந்தாலும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியையும் ஏற்காமல் இருந்து வருகின்றனர். மாற்று அணியை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார் கேசிஆர். இதனால், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது.

தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் தலைமையில் கட்சிகள் இணைவதில் சிக்கல் ஏற்பட்டாலும், தேர்தலுக்குப் பிந்தைய அணியை அமைத்து காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற பேச்சுகளும் நிலவி வருகின்றன. உதாரணமாக, உ.பியில் அகிலேஷின் சமாஜ்வாடி கட்சியுடன் குறைவான தொகுதிகளை பங்கிட்டு தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் விரும்பாத பட்சத்தில், தனித்தனியாக போட்டியிட்டாலும், தேர்தலுக்குப் பிறகு சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவு தரும் என்கிற வகையில் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. ஆனால், இப்படியான கணக்கு பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பை எளிதாக்கவே செய்யும் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில் தான், நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு ஒரு க்ளீயரான மெசேஜை தனது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மூலம் எடுத்துரைத்துள்ளார் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின். காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் அல்லாத கூட்டணியை விரும்பும் கட்சிகளுக்கும், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைக்கலாம் என்ற திட்டத்தில் இருந்து வரும் தலைவர்களுக்கும் ஒருசேர ‘அரசியல் பாடம்’ எடுத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். இதனால், ஸ்டாலினின் இந்தப் பேச்சு, நாடு தழுவிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்பது யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்கான தேர்தல் அல்ல, யார் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல். ஒன்றுபட்ட இந்தியாவை வகுப்புவாதத்தால் பிளவுபடுத்தி எதேச்சதிகார நாடாக மாற்ற நினைக்கும் பாஜகவை அரசியல் ரீதியாக வீழ்த்தியாக வேண்டும். அது ஒன்று தான் நம்முடைய ஒற்றை இலக்காக இருக்க வேண்டும். பாஜகவை 2024 தேர்தலில் வீழ்த்த நினைக்கும் அனைவரும் ஒன்றாகச் சேர வேண்டும். அந்த ஒற்றுமை உணர்வு வந்துவிட்டாலே வெற்றி பெற்றுவிட்டோம் என்று அர்த்தம்.

மாநிலங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாட்டை வைத்து, தேசிய அரசியலைத் தீர்மானித்தால் இழப்பு நமக்குத் தான் என்பதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும். இதனை காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளுக்கும் சேர்த்தே நான் சொல்கிறேன். தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டு காலமாக நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு இந்த ஒற்றுமை ஒன்று தான் அடிப்படை. அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து விட்டுக் கொடுத்து பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர வேண்டும். அதே நேரத்தில் சிலரால் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் கூட்டணி என்று சொல்லப்படும் வாதங்களையும் நிராகரிக்க வேண்டும். அது கரை சேராது.

தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்துக் கொள்கிறோம் என்று சொல்வதும் நடைமுறைக்கு சரியாக வராது. நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்துக்கு போர் வியூகங்களை வகுக்கும் பாசறைக் கூட்டமாக எனது பிறந்தநாள் பொதுக்கூட்டம் அமைந்திருப்பது மகிழ்ச்சி. இங்கு வருகை தந்துள்ள அகில இந்தியத் தலைவர்கள் இந்த தகவல்களை டெல்லிக்கு எடுத்துச் செல்லுங்கள். இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்லுங்கள். ஒற்றுமையை வலியுறுத்துங்கள். வெற்றிக்கு அடித்தளமிடுங்கள். இப்போதே விதைப்போம். அடுத்த ஆண்டு மார்ச் என்பது அகில இந்திய அரசியலுக்கு அறுவடைக் காலமாக அமையும் எனச் சூளுரைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த பொதுக்கூட்ட மேடைக்கு வருவதற்கு முன்பாக பரூக் அப்துல்லா, ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏன் வரக்கூடாது என்று பேசினார். இந்த மேடையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசும்போதும் ஸ்டாலின் இந்தியாவுக்கே தலைமை தாங்குவார், அகில இந்திய தலைவர்கள் ஒருநாள் கோபாலபுரத்தை தேடி வந்து இந்தியாவிற்கு தலைமை தாங்க வேண்டும் என்று கேட்கும் காலம் வரும் எனப் பேசினார். ஆனால், இவற்றை எல்லாம் மறுத்து, பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதே சரியான வழிமுறை என தீர்க்கமாக தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார் ஸ்டாலின்.