பெண்ணிற்கு தவறான சிகிச்சையால் இறந்து விட்டதாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

பெண்ணிற்கு தவறான சிகிச்சையால் இறந்து விட்டதாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

 

கோவை, அன்னூர் அருகில் உள்ள செம்மானிசெட்டி பாளையத்தை சேர்ந்த குமாரசாமி என்பவரின் மனைவி 54 வயதான சகுந்தலா. அவர் துடியலூர் அடுத்து உள்ள வடமதுரை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மாருதி மருத்துவமனையில் கடந்த 5 மாதங்களாக சைனஸ் தொந்தரவு காரணமாக அங்குள்ள மருத்துவர் பாலமுருகனிடம் சிகிச்சை எடுத்து வந்து உள்ளார். சைனஸ் தொந்தரவு அதிகரித்ததால் மூக்கில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறி உள்ளார்.

 

அதன்படி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சுமார் நேற்று 12.30 மணியளவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் சிறிது நேரத்தில் சகுந்தலா இறந்து உள்ளார். இதனால் அங்கு இருந்த சகுந்தலாவின் மகன்கள் கணேசமூர்த்தி, சந்திரசேகரன் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

தொடர்ந்து அவர்கள் மருத்துவர்களிடம் கேட்ட போது, சரியான பதில் தரவில்லை என்றும், அவர் தவறான சிகிச்சை செய்ததால் தான் சகுந்தலா இறந்தார் என்றும், மருத்துவமனையில் போதிய வசதிகளும், அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களும், கூடுதல் மருத்துவரும் இல்லை என்றும் கூறி மருத்துவர் மீதும், அடிப்படை வசதிகள் கூட இல்லாத மருத்துவமனை மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி திடீரென மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார் முற்றுகையிட பொதுமக்களிடம் சமாதானம் பேசினர். அதற்கு பிறகு சகுந்தலா மகன் சந்திரசேகரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மாருதி மருத்துவமனையில் இருந்து இறந்த சகுந்தலா உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் இந்த பகுதியில் 4 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது. இறந்த தாயார் சகுந்தலாவை பார்த்து அவரது மகன்கள் தாயின் கண்ணத்தை பிடித்து அழுதது அங்கு இருந்தவர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறும் போது, மூக்கில் சைனஸ் பிரச்சனை இருந்ததால் இந்த மருத்துவமனைக்கு சகுந்தலா காலை 10 மணிக்கு வந்ததாகவும், மேலும் சகுந்தலாவிற்கு மற்ற தொந்தரவுகளும் எதுவும் இல்லை என்றும், மூக்கில் அறுவை சிகிச்சை செய்ய சென்ற போது, மருத்துவமனையில் சரியான உபகரணங்களும் இல்லை என்றும், மயக்க மருந்து கொடுக்க அதற்குரிய மருத்துவர்களும் இல்லை என்றும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாங்கள் கேட்க சென்றால் மருத்துவர் சரியான பதிலும் சொல்லவில்லை என்றும் தெரிவித்தனர்.