‘பூஸ்டர்’ தடுப்பூசி போட்டவர்கள் நாசி’ டோஸ் போட வேண்டாம்- தடுப்பூசி பணிக்குழு தலைவர் பேட்டி..!

புதுடெல்லி: பூஸ்டர் தடுப்பூசி போட்டவர்கள் நாசி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டாம் என்று ஒன்றிய அரசின் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற இரண்டு தடுப்பூசிகளுடன் மேலும் பூஸ்டர் தடுப்பூசியும் மக்கள் போட்டுள்ளனர். இவற்றில் பூஸ்டர் தடுப்பூசியை 70 சதவீதம் பேர் இன்னும் போடவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதால், தடுப்பூசி போடுதல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான ‘இன்ட்ரானாசல்’ என்ற மூக்கு வழி (நாசி) செலுத்தப்படும் தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது.

அந்த தடுப்பூசி வரும் ஜனவரி கடைசியில் தனியார் மருத்துவமனையில் கிடைக்கும் என்றும், அதன் ஒரு டோஸ் விலை ரூ.800 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக 5 சதவீத ஜிஎஸ்டி வரி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரம் அரசு தடுப்பூசி மையங்களில் இந்த தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை ரூ.325 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த தடுப்பூசி தற்போதைக்கு தனியார் மையங்களில் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய அரசின் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறுகையில், ‘மூக்கு வழி செலுத்தப்படும் இன்ட்ரானாசல் தடுப்பூசியானது, முதல் பூஸ்டர் தடுப்பூசியாக இருக்கும். ஒருவர் ஏற்கனவே பூஸ்டர் தடுப்பூசி போட்டிருந்தால், அவர் மூக்குவழி செலுத்தப்படும் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டியதில்லை. இந்த தடுப்பூசியானது, பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டுமே போடப்படும். மேலும், தடுப்பூசி திட்டத்தின் நான்காவது டோஸ் தடுப்பூசியாக கருதக் கூடாது. அவ்வாறு இந்த தடுப்பூசியை 4வது டோஸ் தடுப்பூசியாக போட்டால் எதிர்மறையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது’ என்றார்.