முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2-ம் தேதி டெல்லி பயணம்..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் ஏப்ரல் 2- ஆம் தேதி அன்று டெல்லி செல்ல உள்ளார். அதைத் தொடர்ந்து, டெல்லியில் மிக பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள, தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

இதற்கான, நிகழ்ச்சி ஏற்பாடுகளை தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, பீகார் மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான தேஜஸ்வி மற்றும் தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றப் பின் மு.க.ஸ்டாலின், டெல்லிக்கு செல்வது இது மூன்றாவது முறையாகும்.

ஏற்கனவே, அ.தி.மு.க.வுக்கு டெல்லியில் கட்சி அலுவலகம் உள்ள நிலையில், தற்போது தி.மு.க.வுக்கும் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.