தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் -சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் யார், யார் குற்றவாளிகளோ அவர்கள் நிச்சயமாக கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழக சட்டப் பேரவையில் நேற்று முன்தினம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணை ஆணைய அறிக்கையில் அடங்கிய பரிந்துரைகள் மீது அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் சட்டப் பேரவையில் விவாதிக்க வேண்டும் என்ற அரசினர் தீர்மானத்தை நேற்று சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

அதன் மீதான விவாதத்தில் பல்வேறு உறுப்பினர்கள் பேசினர். இந்த விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை கமிஷன் மூலமாக நீதி விசாரணை நடைபெற்று, அதன் அறிக்கை என்னிடத்திலே கொடுக்கப்பட்டு, நேற்றைய தினம் அந்த அறிக்கை சட்டமன்றத்திலே வைக்கப்பட்டு, அதையொட்டி விவாதத்தை நடத்துவதற்காக அரசினர் தீர்மானத்தினை நான் முன்மொழிந்தேன். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடானது தமிழ்நாட்டு வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளி. அதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. துயரமும், கொடூரமுமான அந்தச் சம்பவத்தை இன்று நினைத்தாலும் உடல் நடுங்குகிறது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான், உடனடியாக தூத்துக்குடிக்குச் சென்றேன். துப்பாக்கிச் சூட்டின் சத்தமும், மக்களின் மரண ஓலமும் ஒலித்துக் கொண்டிருந்த காட்சியானது இன்றும் என் மனதை வாட்டிக் கொண்டு இருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் அமைதி வழியில் மிகத் தொடர்ச்சியாக பல்லாண்டு காலமாக தூத்துக்குடி மண்ணில் நடந்த போராட்டமாகும். இதை மேலும் வலியுறுத்தக்கூடிய வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் 22-5-2018 அன்று மாபெரும் ஊர்வலத்தை அந்தப் பகுதி மக்கள் நடத்தினார்கள். மாவட்ட ஆட்சியரிடத்திலே மனு கொடுக்கவே அவர்கள் இந்த ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்தப் பிரச்னையை அன்றைய அதிமுக அரசு சரியாகக் கையாளவில்லை. ஊர்வலமாக வரக்கூடிய மக்களை அழைத்துப் பேசவில்லை. அவர்களிடம் மனுக்களைப் பெற்று கருத்துகளைக் கேட்டறிய அன்றைக்கு அந்த அரசு தயாராக இல்லை. இது மட்டுமல்லாமல், ஊர்வலமாக வந்த மக்கள் மீது அதிகாரத்தை அத்துமீறிப் பயன்படுத்தி கலைப்பதற்கு திட்டமிட்டார்கள். துப்பாக்கிச் சூடும் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் உறுதி செய்து அறிக்கை கொடுத்திருக்கிறது. அந்தச் சம்பவத்திலே 11 ஆண்கள், 2 பெண்கள் என 13 பேர் துள்ளத்துடிக்க பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தார்கள். 64 பேர் சிறிய அளவிலான காயங்களை அடைந்தார்கள்.

கடந்த அதிமுக ஆட்சியின் அன்றைய முதல்வர் பழனிசாமியின் எதேச்சதிகார நினைப்புக்கு எடுத்துக்காட்டாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. அதாவது, அதிமுக ஆட்சியின் ஆணவத்துக்கு தூத்துக்குடியில் இத்தனை உயிர்கள் பலியானது.
நேற்றைக்கு தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அறிக்கைகளுமே, அவர்கள் அமைத்த ஆணையங்களால் அளிக்கப்பட்ட அறிக்கைகளாகும். நாம் வந்து எந்த ஆணையமும் இதற்காக அமைக்கவில்லை. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் பக்கம் 252ல் இது அம்பலம் ஆகி இருக்கிறது. ‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘அந்தச் சம்பவத்தை மற்றவர்களைப் போல ஊடகங்களில் வந்த செய்தி மூலம் அறிந்து கொண்டேன்’ என்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியும் அளித்திருக்கிறார்.

ஆனால், இந்த ஆணையத்திடம் மிக வலுவாக இருக்கும் ஆதாரம் என்னவென்றால், சாட்சியாக விசாரிக்கப்பட்ட அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அப்போதைய டிஜிபி ராஜேந்திரன், அப்போதைய உளவுத் துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடியில் நடக்கும் சம்பவங்களையும், அங்குள்ள நிலவரங்களையும் நிமிடத்துக்கு நிமிடம் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து வந்ததாகக் கூறினார்கள். இது ஆணையத்தின் அறிக்கையில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையமே, இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது. கொடூரமான கொலைவெறித் தாக்குதல் தொடர்பாக நேரடி வர்ணனைகளை தனது அறையில் உட்கார்ந்து கேட்டுவிட்டு, வெளியில் வந்து ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்று சொன்னவர்தான் அன்றைக்கு முதல்வராக இருந்த பழனிசாமி. அவரது துரோகங்களும், தவறுகளும் அவரது அரசியல் வாழ்க்கையை அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். புதிதாக நாம் எதையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இதற்கான தண்டனையின் தொடக்கத்தைத் தான் தேர்தல் தோல்வி மூலமாக அதிமுகவுக்கு தமிழ்நாட்டு மக்கள் வழங்கினார்கள். நீதிபதி அருணா ஜெகதீசனின் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் திமுக அரசு பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. கலவரத்தில் ஈடுபடாத நபர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. போராட்டத்தின்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட 93 நபர்களுக்கு, அந்த நபர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனுபவித்த மனவேதனைகளைக் கருத்தில் கொண்டு, 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. இங்கே பேசிய சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களின் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு, ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, மேலும், கூடுதலாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். விசாரணை ஆணையம் தனது இறுதி அறிக்கையினை 18-5-2022 அன்று அரசிடம் அளித்தது. அந்த ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துக்களை, அந்தப் பரிந்துரைகளை அரசு கவனமாக பரிசீலனை செய்தது. இன்னும் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம். கலவரம் ஏற்பட்டதற்கான காரணங்கள், கலவரத்தை கையாண்ட முறை, கலவரத்திற்குப் பிறகு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த ஆணையத்தின் முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் அரசால் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த விசாரணை அறிக்கை குறித்து 29-8-2022 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் நாங்கள் விவாதித்தோம். அந்த அடிப்படையிலே தான் இந்த அவையில் கூட அந்த அறிக்கையை நாம் தாக்கல் செய்தோம். ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, இச்சம்பவத்தில் தொடர்புடைய சில அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அந்தப் பணிகளைத் தொடங்கியிருக்கிறோம். அதனுடைய விவரத்தை இந்த அவைக்கு நான் இப்போது தெரிவிக்க விரும்புகிறேன். தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர் மீது, துறை ரீதியான நடவடிக்கை பொதுத் துறை மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினை சேர்ந்த மூன்று வருவாய் துறை அதிகாரிகள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

உள்துறை மூலமாக, அப்போதைய தென் மண்டல காவல் துறைத் தலைவர், திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் துணைக் காண்காணிப்பாளர், மூன்று ஆய்வாளர்கள், ஒரு சார்-ஆய்வாளர் மற்றும் 7 காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் நேரடியாக ஈடுபட்ட ஒரு ஆய்வாளர் உட்பட 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்திலும் விரைவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்பதையும் இந்த அவைக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஒரு ஆட்சி நிர்வாகம் இரக்கமற்று எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் தான், கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி கொடூரம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. யார், யார் குற்றவாளிகளோ, அவர்களெல்லாம் நிச்சயமாக கூண்டில் ஏற்றப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.