ராஜ்கோட்டில் பிரதமர் மோடி ஊர்வலம்… இஸ்லாமிய சமூகத்தினர் உட்பட பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு.!!

குஜராத் ராஜ்கோட்டில் பிரதமர் மோடியின் ஊர்வலத்தில் கூடியிருந்த இஸ்லாமிய சமூகத்தினர் உட்பட பொதுமக்கள் அனைவரும் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி அம்மாநிலத்தில் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில், இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ள பிரதமர் மோடி, ராஜ்கோட்டில் திறந்த காரில் ஊர்வலம் சென்றார். பிரதமரை காண சாலையில் ஏராளமானோர் திரண்டனர்.

சாலையின் இருபுறமும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் பிரதமர் மீது மலர் தூவி வரவேற்றனர். கூட்டத்தில் இருந்த இஸ்லாமிய சமுதாய மக்களும் ஆர்வத்துடன் பிரதமர் மோடியை மலர்தூவி வரவேற்றனர். மக்களின் உற்சாகத்தைக் கண்டு பிரதமர் மோடி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பின்னர் கூட்டத்தைப் பார்த்து கையை அசைத்துக்கொண்டே சென்றார். அப்போது மக்கள் பாரத் மாதா கி ஜெய்… மோடி… மோடி… என்ற முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக பிரதமர் மோடி ராஜ்கோட்டில் சுமார் 5860 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்தியா நகர்ப்புற வீட்டுவசதி மாநாடு 2022-ஐயும் அவர் தொடங்கி வைத்தார். இந்தியாவில் வீடுகள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். லைட் ஹவுஸ் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 1100க்கும் மேற்பட்ட வீடுகளை அவர் திறந்து வைத்தார். பிராமணி-II அணையிலிருந்து நர்மதா கால்வாய் நீரேற்று நிலையம் வரை நீர் வழங்கல் திட்டம், மோர்பி-மொத்த குழாய் திட்டம் தவிர, பிராந்திய அறிவியல் மையம், மேம்பாலம் பாலம் மற்றும் சாலைத் துறை தொடர்பான பிற திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.