இது இந்தியா அல்ல… இனி பாரத் என்று தான் பயன்படுத்த வேண்டும் – ஆர்.எஸ்.எஸ் அறிவுறுத்தல்.!!

கவுகாத்தி: இந்தியா என்பதற்கு பதிலாக, இனி, ‘பாரத்’ என்று தான் பயன்படுத்த வேண்டும் என, பா.ஜ., மற்றும் சங் பரிவார் அமைப்புகளை, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் அறிவுறுத்தியுள்ளார். நாட்டின் பெயர் இந்தியாவா, பாரதமா என்ற சர்ச்சை, சுதந்திரம் கிடைத்த, 1947 முதல் இருந்து வருகிறது. அதனால் தான் நம் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போது, இந்தியா என்பது, பாரத் என்று அழைக்கப்பட்டது.காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட, 28 கட்சிகள் கொண்ட கூட்டணிக்கு, ‘இண்டியா’ கூட்டணி என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதனால், இந்தியா என்ற பெயர் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. ‘ஜி20’ மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் விருந்திற்கான அழைப்பிதழில், ‘பாரத ஜனாதிபதி’ என்றும், பிரதமர் மோடியின் இந்தோனேஷிய பயண குறிப்பில், ‘பாரதப் பிரதமர்’ என்றும் உள்ளது. நாடெங்கும் நாட்டின் பெயர் பற்றிய விவாதம் கிளம்பியுள்ளது.
வரும், 18ல் துவங்கவுள்ள பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடரில், நாட்டின் பெயரை பாரத் என்று அதிகாரப்பூர்வமாக மாற்ற, பா.ஜ., அரசு திட்டமிட்டுள்ளதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த சர்ச்சைகளுக்கு, ஆளும் பா.ஜ., தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக, எந்த பதிலும் தரப்படவில்லை.இந்நிலையில், ‘நாட்டின் பெயரை, இந்தியாவுக்கு பதில் பாரத் என்று தான் பயன்படுத்த வேண்டும்’ என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார். அஸாம் மாநிலம், கவுகாத்தியில் நடந்த விழாவில் பேசிய அவர், ‘இனி பேச்சிலும் எழுத்திலும் பாரத் என்றே பயன்படுத்த வேண்டும். வெளிநாட்டினருக்கு புரியவில்லை என்றாலும், பாரத் என்றே பயன்படுத்துங்கள்.
எப்போது புரிய வேண்டுமோ, அப்போது புரிந்து கொள்வர்’ என்றார்.பா.ஜ., மற்றும் சங் பரிவார் அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு, ஆர்.எஸ்.எஸ்., தலைமை அனுப்பியுள்ள செய்தியில், ‘துவக்கம் முதல் பாரத் என்ற பெயரையே, நாம் பயன்படுத்தி வந்தோம். இடையில் இந்தியா என்ற பெயரையும் பயன்படுத்த துவங்கியுள்ளோம். இனி பேச்சு, எழுத்து என அனைத்திலும் பாரத் என்றே பயன்படுத்த வேண்டும். பாரத் என்று சொல்வது, யாருக்காவது புரியவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம்’ என கூறப்பட்டுள்ளது..