திருச்சி பாராளுமன்ற தொகுதியை குறி வைக்கும் துரை வைகோ- அதிர்ச்சியில் திருநாவுக்கரசர்..!!

திராவிடக் கட்சிகள் மற்றும் இதர கட்சிகள் தங்கள் கட்சியின் மாநாடுகளை நடத்துவது பெரும்பாலும் திருச்சியில்தான். இத்தகைய சிறப்புவாய்ந்த திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் இருந்து வருகிறார். வரும் தேர்தலிலும் அவர் திருச்சியில் தி.மு.க கூட்டணி சார்பில் சீட் பெற தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறார். இதற்கு முன்னோட்டமாக ஊருக்கு முன்பே தொகுதியை வலம் வந்து, ‘வரும் தேர்தலில் திருச்சி தொகுதியில் மறுபடியும் போட்டியிடப் போகிறேன்’ என்று நிர்வாகிகள் மத்தியில் ஓப்பனாக பேசி வருகிறார்.

அதோடு, தொகுதியில் பரவலாக நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, பொதுமக்களைச் சந்தித்து மனு பெறுவது என்று தொகுதியை சுற்றி சுற்றி வருகிறார். அவர் திருச்சி தொகுதியை மறுபடியும் பெற நினைப்பதற்கு காரணம், கடந்த முறை அவருக்கு திருச்சி தொகுதி மக்கள் ‘அள்ளி’ வழங்கிய அமோக வாக்குகள் தான். இந்நிலையில், அதே தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க முதன்மை பொதுச் செயலாளரும், வைகோ-வின் புதல்வருமாகிய துரை வைகோ திருச்சியில் களமிறங்க தீவிரமாக முயற்சி செய்து வருவதாக கிளம்பியிருக்கும் தகவலால்,
இதுபற்றி, திருச்சி மாவட்ட ம.தி.மு.க-வினர் சிலரிடம் பேசினோம். “துரை வைகோ தான் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், அதில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கிறார். அதுவும் பெரிய வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறார். அதன் மூலம் கட்சியில் தனக்கு இருக்கும் எதிர்ப்பையும் சரிக்கட்டலாம் என கணக்கு போடுகிறார். சொந்த தொகுதியான நெல்லையில் போட்டியிடலாம் என்றாலும், தனது வெற்றிக்குச் சாதகமான, அதேநேரம் கூட்டணியில் உள்ள பிரதானக் கட்சியான தி.மு.க அதிகம் நெருக்கடி தராத தொகுதியாக பார்த்து நிற்க வேண்டும் என்று நினைக்கிறார்.

அந்த வகையில்தான், அவரின் பார்வை திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மீது திரும்பியிருப்பதாகச் சொல்கிறார்கள். கடந்த 1951 – ம் வருடத்தில் இருந்து தேர்தலை சந்தித்து வரும் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் இதுவரை ஒரே ஒருமுறை தான் தி.மு.க நேரடியாக களம் கண்டிருக்கிறது. 1980 -ம் வருடம் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க சார்பில் செல்வராஜ் மட்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு, கூட்டணிக் கட்சிகளுக்கு இந்த தொகுதியை தி.மு.க ஒதுக்கி வந்தது.

அதனால், தி.மு.க இந்தமுறையும் திருச்சியை கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கும் என்று துரை வைகோ நினைப்பதால், இங்கே போட்டியிட நினைக்கிறார். அதேபோல், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு கழகங்களின் எம்.பி-க்களை விட கம்யூனிஸ்ட், காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. இதற்கு காரணம், கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்கும் போது பெரும்பாலும் இரண்டு 😇 தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளவில்லை. இதை நன்கு உணர்ந்த துரை வைகோ, திருச்சியில் கால் பதிக்க நினைக்கிறார். அதோடு, ஏற்கனவே கடந்த 2004 – ம் வருட நாடாளுமன்ற தேர்தலின் போது, திருச்சி தொகுதியை தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க பெற்று, அப்போது ம.தி.மு.க சார்பில் எல்.கணேசன் வெற்றிபெற்றார்.
அதேபோல், திருச்சி தொகுதி மக்கள் வந்தாரை வெற்றிபெற வைக்கும் குணமுடையவர்கள். இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் திருச்சி தொகுதியை பூர்வீகமாக கொள்ளாத பலரை ஜெயிக்க வைத்திருக்கிறார்கள். 1951 – ம் தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றிப்பெற்ற டாக்டர் மதுரம் (நாகர்கோவில்), 1962 மற்றும் 1976 ஆகிய இரு தேர்தல்களில் நின்று வெற்றிப் பெற்ற மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியைச் சேர்ந்த அனந்தன் நம்பியார் (கேரளா), 1971 மற்றும் 1977 ஆகிய தேர்தல்களில் இந்திய கம்னியூஸ்ட் கட்சி சார்பில் நின்று வெற்றிவாகை சூடிய கல்யாணசுந்தரம் (சேலம்), 1998 மற்றும் 1999 ஆகிய தேர்தல்களில் பா.ஜ.க சார்பில் நின்று வெற்றிப் பெற்றதோடு, மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த ரங்கராஜன் குமாரமங்கலம் (நாமக்கல்), 2001 – ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நின்று வென்ற அ.தி.மு.க-வைச் சேர்ந்த தலித் எழில்மலை (விழுப்புரம்), 2004 – ம் வருட தேர்தலில் வென்ற ம.தி.மு.க எல்.கணேசன் (தஞ்சாவூர்), இறுதியாக கடந்த தேர்தலில் வெற்றிப் பெற்ற காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் (புதுக்கோட்டை) என திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக பெரும்பாலானவர்கள் வெளியூர்காரர்களாகவே இருந்து வந்துள்ளனர்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வென்றவர்களில் செல்வராஜ், அடைக்கலராஜ், குமார் ஆகிய மூவர் மட்டுமே மண்ணின் மைந்தர்கள். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட வைகோவின் புதல்வரான தானும் திருச்சி தொகுதியில் நின்றால் சென்டிமென்டாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக கருதுகிறார். அதனால், தனது தந்தையிடமும், தி.மு.க தலைவர்களிடமும் திருச்சியை ம.தி.மு.க-வுக்கு கேட்டு வருகிறார். அதேபோல், தி.மு.க.வை பொறுத்தவரை பெரும்பாலும் கூட்டணி கட்சிகளுக்கு தான் திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த வகையில் நடைபெற உள்ள தேர்தலிலும் தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ம.தி.மு.க ஆகிய கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த போட்டியில் தற்போது ம.தி.மு.க தான் முன்னணியில் உள்ளது. ஏற்கனவே 2004 – ஆம் ஆண்டு இந்த தொகுதியில் ம.தி.மு.க-வின் எல்.கணேசன் வெற்றி பெற்றிருப்பதால் அதை ஒரு காரணமாக காட்டி திருச்சி நாடாளுமன்ற தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க-வினர் தி.மு.க தலைமையை வைகோ மூலம் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த சூழலில் தான் திருச்சியில் கடந்த 12-ம் தேதி மத்திய மண்டல ம.தி.மு.க சார்பில் தேர்தல் நிதி வழங்கும் விழா நடைபெற்றது. திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு மற்றும் புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய ஏழு மாவட்டங்களின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் ம.தி.மு.க-வின் முதன்மை பொதுச் செயலாளரான துரை வைகோ கலந்து கொண்டு தேர்தல் நிதியை பெற்றுக் கொண்டார்.

இதேபோல் ஏற்கனவே கடந்த மாதம் தான் திருச்சியில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் துரை வைகோ பங்கேற்று விட்டு சென்றார். அதேபோல், கடந்த வருடம் அக்டோபர் மாதம் காவிரி விவகாரத்தில் தீர்வு காணாமல் இருப்பதாகவும், நூறு நாள்கள் வேலைத்திட்டத்தை முடக்க நினைப்பதாகவும், மத்திய அரசைக் கண்டித்து ம.தி.மு.க சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிலும் துரை வைகோ தான் கலந்துகொண்டு உரையாற்றினார். தற்போது, அடுத்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டது திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் காலூன்றுவதற்கு முன்னேற்பாடுகளை செய்வதற்காகதான்.
வழக்கமாக ம.தி.மு.க-வில் தேர்தல் நிதி பெறுவது என்றால் வைகோ தான் செல்வார். ஆனால், இப்பொழுது முதல்முறையாக துரை வைகோ வந்திருப்பதை வைத்து பார்க்கும் போது, அவர் திருச்சியில்தான் போட்டியிடப் போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதேபோல், நிதி வழங்கும் விழாவுக்கு பிறகு பேசிய துரை வைகோ, ‘திருச்சியில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமையும், தி.மு.க தலைமையும்தான் முடிவெடுக்கும்’ என்று மறுக்காமல் ‘தலைமை முடிவெடுக்கும்’ என்று உள்ளுக்குள் திருச்சி தொகுதியை குறிவைத்து காய் நகர்த்தி வருவதை சொல்லாமல் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார் என்றார்கள்.