இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு… ஷோரூம்களில் குவியும் மக்கள் கூட்டம்..!

ந்தியாவில் எலெக்ட்ரிக் டூவீலர்களின் ( Electric Two-wheelers) விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் வெறும் 68,324 எலெக்ட்ரிக் டூவீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த நவம்பர் மாதம் 76,163 ஆக உயர்ந்துள்ளது. இது சிறப்பான வளர்ச்சியாகும்.

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் அதிக எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனை செய்த நிறுவனம் என்ற பெருமையை ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 16,246 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மிகவும் குறைவான விலையில் ஓலா எஸ்1 ஏர் (Ola S1 Air) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

அத்துடன் தனது தயாரிப்புகளுக்கு வருட இறுதி சலுகைகளையும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது வழங்கி வருகிறது. எனவே வரும் காலங்களில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய நிலையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டும்தான் விற்பனை செய்து வருகிறது. ஆனால் வரும் காலங்களில் எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே 12,232 எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனை செய்திருப்பதன் மூலம் ஆம்பியர் (Ampere) நிறுவனம் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில், நவம்பர் மாதம் இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்தி, ஆம்பியர் நிறுவனம் அசத்தியுள்ளது. ஆனால் கடந்த நவம்பர் மாதம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள ஒகினவா ஆட்டோடெக் (Okinawa Autotech) நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 9,038 எலெக்ட்ரிக் டூவீலர்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது சுமார் 5,000 எலெக்ட்ரிக் டூவீலர்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. மறுபக்கம் ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric) நிறுவனம் நூலிழையில் மூன்றாவது இடத்தை பறிகொடுத்து, நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் 9,008 எலெக்ட்ரிக் டூவீலர்களை ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

மூன்றாவது இடத்தில் உள்ள ஒகினவா ஆட்டோடெக் நிறுவனத்திற்கும், நான்காவது இடத்தில் உள்ள ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 30 எலெக்ட்ரிக் டூவீலர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் டிவிஎஸ் (TVS) நிறுவனம் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. டிவிஎஸ் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 8,073 எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனை செய்துள்ளது. இதுதான் டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை ஆகும்.

இதற்கிடையே இந்த பட்டியலில் ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம் 6வது இடத்தில் உள்ளது. 7,741 எலெக்ட்ரிக் டூவீலர்களை கடந்த நவம்பர் மாதம் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் முறையே பஜாஜ் (2,987), ஜித்தேந்திரா இவி (1,253), ப்யூர் எனர்ஜி (921), கைனடிக் க்ரீன் எனர்ஜி (838), ரிவோல்ட் (524), டார்க் மோட்டார்ஸ் (33) ஆகிய நிறுவனங்கள் உள்ளன. மற்ற நிறுவனங்கள் ஒருங்கிணைந்து 7,269 எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனை செய்துள்ளன.

இதன் மூலம் கடந்த நவம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 76,163 எலெக்ட்ரிக் டூவீலர்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. இந்தியாவில் சமீபத்தில் எலெக்ட்ரிக் டூவீலர்கள் தீப்பிடிக்கும் நிகழ்வுகள் அதிகமாக நடந்தன. இதனால் எலெக்ட்ரிக் டூவீலர்களின் விற்பனை குறையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக எலெக்ட்ரிக் டூவீலர்களின் விற்பனை உயர்ந்து கொண்டே வருவதை, இந்த புள்ளி விபரங்கள் உறுதி செய்கின்றன. பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதும், எலெக்ட்ரிக் டூவீலர்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதும்தான் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

அத்துடன் சுற்றுச்சூழலில் அக்கறை உள்ளோரும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். எனவே வரும் காலங்களில் எலெக்ட்ரிக் டூவீலர்களின் விற்பனை இன்னும் பல மடங்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன. இதன் காரணமாக இன்னும் சில ஆண்டுகளில், பெட்ரோல் டூவீலர்களின் விற்பனை ‘டல்’ அடிக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் டூவீலர்கள் மட்டுமல்லாது, இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையும் தற்போது உயர தொடங்கியுள்ளது.

காற்று மாசுபாடு மிகவும் அதிகமாக உள்ள தலைநகர் டெல்லி போன்ற பகுதிகளில், பழைய பெட்ரோல், டீசல் கார்களை இயக்குவதற்கு திடீர் திடீரென பல்வேறு தடைகள் விதிக்கப்படுகின்றன. இதனால் கார்களை வீட்டை விட்டு கூட வெளியே எடுக்க முடியாத அளவிற்கு நெருக்கடி காணப்படுகிறது. இந்த உத்தரவுகள் தற்போது தற்காலிகமானதாக இருந்தாலும், எதிர்காலத்தில் நிரந்தரமாக்கப்படலாம் என்ற அச்சம் மக்களிடம் காணப்படுகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை அதிகரிப்பதற்கு இதுவும் கூட ஒரு காரணமாக உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.