இனி சென்னையில் மழைநீர் வீணாகாது.. குளங்கள் அமைக்கும் அசத்தல் திட்டம்..!

சென்னை: சென்னை மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், குளங்களை அமைக்கும் அசத்தலான திட்டத்தை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

இவ்வாறு அமைக்கப்படும் குளங்களால் மழை நீர் சாலையில் தேங்கும் என்ற பேச்சுக்கே இடமிருக்காது என சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதன்முதலாக இந்த குளங்கள் பெரம்பூரில் அமைக்கப்படவுள்ளதாகவும், பின்னர் மற்ற பகுதிகளுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தலைநகர் சென்னையில் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வரும் பிரச்சினைகளில் ஒன்று சாலைகளிலும், தெருக்களிலும் மழை நீர் தேங்குவது தான். இந்த பிரச்சினையை தீர்க்க எத்தனையோ வழிமுறையை கையாண்ட பிறகும், இதற்கு நிரந்தரத் தீர்வு காண முடியவில்லை. எனினும், தற்போதைய திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால்களை அமைத்தது, பழைய வடிகால்களை தூர்வாரியதால் கடந்த சில மாதங்களாக மழை நீர் தேங்குவது குறைந்துள்ளது. எனினும், முழுமையாக தீர்வு காணப்படவில்லை.

இந்நிலையில்தான், சென்னையில் பல பகுதிகளில் மினி குளங்களை அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. 10 அடி ஆழத்தில் இந்த குளங்கள் அமைக்கப்படவுள்ளன.இதில்நீர் ஊறவைக்கும் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. மேலும், மழைநீர் வடிகால்வாய்களும் இந்தக் குளங்களில இணைக்கப்பட உள்ளன. மேலும் சாலை மேற்பரப்பு ஓடையும் இதில் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ள நீர் இந்தக் குளத்துக்கு சென்றுவிடும்.

இந்த குளங்களைச் சுற்றிலும் தோட்டங்கள், அலங்கார மின் விளக்குகள், அமரும் இருக்கைகள் ஆகியவை அமைக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக 5 இடங்களில் இந்தக் குளங்களையும், பூங்காக்களையும் அமைக்க ரூ. 92 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூரில் உள்ள முரசொலிமாறன் பூங்கா தெற்கு பகுதியில் ரூ. 18 லட்சம் செலவில் இந்த குளம் அமைக்கப்படுகிறது. வி.ஜி.பி செல்வா நகர் 2-வது பிரதான சாலையில் ரூ.12 லட்சம் செலவிலும், கங்கை தெருவில் ரூ.8 லட்சம் செலவிலும் இந்த பூங்கா அமைக்கப்பட உள்ளன. பின்னர், படிப்படியாக இந்தக் குளங்கள் மற்ற பகுதிகளுக்கு விரிவுப்படுத்தப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.