கோவையில் குறைந்த விலைக்கு நகைகள் தருவதாக கூறி மோசடி- தனியார் நிறுவனம் மீது புகார்..!

கோவை: திருப்பூர் மாவட்டம் பல்லடம் மசூதி வீதியை சேர்ந்தவர் சல்மான் கான்(வயது 23). இவர் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவையில் தனியார் டிரேடிங் நிறுவனம் செயல்பட்டு வந்தது .இந்த நிறுவனத்தில் குறைந்த விலைக்கு நகைகள் தருவதாக கூறி விளம்பரம் செய்தனர். இந்த விளம்பரத்தை பார்த்து நான், எனது நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என 50க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்தோம். ஆனால் அவர்கள் கூறியபடி பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர் குறைந்த விலைக்கு நகைகள் தரவில்லை. முதலீட்டு தொகையையும் திருப்பிக் கொடுக்க மறுத்துவிட்டனர். பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட போதும் உரிய பதில் அளிக்கவில்லை. நிறுவனத்தினர் லட்சக்கணக்கில் மோசடி செய்து விட்டனர். தற்போது சில தினங்களுக்கு முன்பு செல்போனில் அழைத்து பேசிய போது அந்த மோசடி நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் நான் தற்போது என்.ஐ.ஏ விசாரணையில் உள்ளேன். நீங்கள் அடிக்கடி எனக்கு போன் செய்தால் உங்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரிப்பார்கள் என மிரட்டல் விடுக்கிறார். எனவே எங்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.