அடுத்த மாதம் ஐ.நா சபையில் மகாத்மா காந்தியின் சிலை திறப்பு..!

டுத்த மாதம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் பொழுது, ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்தியாவிடமிருந்து பரிசாக மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை திறக்கப்பட உள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தின் விரிவான வடக்கு புல்வெளியில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை வைக்கப்படும் என்று தூதரகத்துக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் ஒற்றுமை சிலையை வடிவமைத்த புகழ்பெற்ற இந்திய சிற்பி பத்மஸ்ரீ விருது பெற்ற ராம் சுதாரால் செய்யப்பட்ட மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை டிசம்பர் 14 அன்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெயசங்கர் ஐநாவிற்கு வருகை தரும் போது திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விழாவில் ஐநா பொதுச் செயலாளர், ஐநா பொது சபையின் 77வது அமர்வின் தலைவர் சபா கோரோசி மற்றும் அனைத்து 15 பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.