அதிமுக அணிகள் இணைந்தாலும் தி.மு.க.வுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை- சுப.வீரபாண்டியன் பேட்டி..!

கோவை:
உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளையும் இணைக்க பா.ஜ.க முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. முதலில் அ.தி.மு.க.வில் எத்தனை அணிகள் உள்ளன என்ற தகவல் இதுவரை வரவே இல்லை. அணிகளை இணைப்பது தான் பா.ஜ.கவின் வேலை என்று சொன்னால் ஒரு கட்சியின் மீது இன்னொரு கட்சி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை தான் காட்டுகிறது. இதன் மூலம் அ.தி.மு.க பா.ஜ.கவின் கைப்பாவை என்பது வெளிப்படையாக தெரிகிறது. அ.தி.மு.க.வில் அனைவரும் இணைந்திருந்தபோது 2019 மற்றும் 2022-ல் நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. எனவே பாராளுமன்ற தேர்தலில் இரு அணிகள் இணைந்தாலும் தி.மு.க.வுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.