பள்ளி நிர்வாகம் தான் போக்குவரத்து நெருக்கடிகளை சரி செய்ய வேண்டும் – கோவை கலெக்டர் உத்தரவு..!

மிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு பள்ளி வேன்களும், பேருந்துகளும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்குவதை பார்க்க முடிகிறது.

பல இடங்களில் பள்ளி வளாகத்திற்குள் செல்லாமல், ரோட்டோரமாக வாகனங்களை நிறுத்தி பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் காட்சியை பார்க்க முடிகிறது.

தமிழகமெங்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு மூன்று நாட்களாகிறது. பெரும்பாலான இடங்களில் பள்ளிக் குழந்தைகள் வாகனங்களில் திணிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்படுவதை பார்க்க முடிகிறது. பள்ளி வளாகங்களில் முன் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பள்ளி வளாகத்திற்குள் வாகனங்களை அனுமதிக்கவேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

சமீபத்தில் இது குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்திய கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பதி, ஆட்டோ மற்றும் வேன் போன்ற வாகனங்களில் வரும் பள்ளி குழந்தைகளை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். குழந்தைகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் பள்ளிகள் தனிக்கவனமுடன் செயல்படவேண்டும், பள்ளி வளாகம் அருகே உள்ள உள்ள போக்குவரத்து நெருக்கடிகளை முறைப்படுத்த பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

பெரும்பாலான பள்ளி வளாகங்களில் ஒலிபெருக்கிகள் இல்லை. பள்ளிகளுக்கு முன் உள்ள சாலைப் போக்குவரத்தை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பள்ளி நிர்வாகம் மேற்கொள்வதில்லை. இது குறித்து பல்வேறு புகார்கள் பெறப்பட்டிருப்பதால் கோவை வட்டாரத்தை சேர்ந்த அனைத்து பள்ளிகளிலும் போக்குவரத்தை நெறிப்படுத்த பள்ளி நிர்வாகமே தனி ஊழியர்கள் நியமிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் இரண்டு நுழைவாயில்கள் அமைக்கப்படவேண்டும். ஒரு வாசல் வழியாக உள்ளே வரும் வாகனங்கள், இன்னொரு வாயில் வழியாக வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் பள்ளி வளாகத்தில் மட்டுமே வாகனங்களிலிருந்து பள்ளிக் குழந்தைகள் இறங்க அனுமதிக்கப்பட வேண்டும். பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிட்டு அனைத்து பள்ளி நிர்வாகங்களும் உடனடியாக தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கோவை ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

என். எஸ். எஸ் என்னும் தேசிய மாணவர் படை, முன்பொரு காலத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் செயல்பட்டு வந்தது. தேசிய மாணவர் படையில் உள்ள மாணவர்களின் உதவியோடு பள்ளி வளாகத்தில் வரும் போக்குவரத்து நெருக்கடிகளை சரி செய்ய முடியும்.

பள்ளிக்கு வரும் ஒவ்வொரு மாணவரும் எந்த வாகனங்களில் வருகிறார்கள்? எப்படி திரும்பிச் செல்கிறார்கள் என்பதையெல்லாம் பதிவு செய்வதோடு, அவசர காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்ணையும் பள்ளி நிர்வாகம் வைத்திருக்கவேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கோவை

ஆட்சியரின் உத்தரவை தமிழ்நாடு முழுவதுமுள்ள பள்ளி நிர்வாகங்கள் பரிசீலத்து நடவடிக்கை எடுப்பது நல்லது.