செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் அனுமதி- பலத்த போலீஸ் பாதுகாப்பு.!!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளதை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெறுவது எப்போது என்று மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.

செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நேற்று விசாரணை நடத்தியது. அமைச்சர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், எவரொருவரையும் கைது செய்வதற்கான நடைமுறைகளை பின்பற்றப்பட வில்லை என்று தெரிவித்தார்.

செந்தில் பாலாஜியை வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், சரியான நடைமுறைகள் பின்பற்றாமல் ரிமாண்ட் செய்யப்பட்டால், ஆட்கொணர்வு மனுக்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் எடுத்து கூறினார். இந்த ஆட்கொணர்வு மனு ஏற்புடையது என்று தெரிவித்த அவர், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று அவர் தனது வாதத்தில் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜியின் மனைவியின் கோரிக்கையை ஏற்று, அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற கோர்ட்டு அனுமதி அளித்தது. தொடர்ந்து ஆட்கொணர்வு மனு மீதான விசாணை 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவையடுத்து ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய வேண்டி புழல் மத்திய சிறையில் இருந்து அதற்கான ஆணையை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முதல்வர் விமலாவுக்கு இரவு சுமார் 20.30 மணிக்கு மெயில் மூலம் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்போடு காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. இதையடுத்து காவேரி மருத்துவமனை போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவேரி மருத்துவமனை வளாகத்தில் இரண்டு உதவி ஆணையர்கள் 4 ஆய்வாளர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளது. அவருடைய இதயத்தில் 90 சதவிகித அடைப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் எப்போது பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெறும் என்று மருத்துவமனை நிர்வாகம் விரைவில் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.