உயரப்போகுது பெட்ரோல், டீசல் விலை..!

ந்தியாவில் இன்னும் சில தினங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் மீது விதிக்கப்பட்டுள்ள திடீர் வரி காரணமாக இந்த விலை உயர்வு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் என்பது மிகவும் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இன்று வாகனங்கள் இல்லாமல் எதுவும் இயங்காது என்ற நிலை வந்துவிட்டது. இப்படியான சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலை என்பது நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்களின் பொருளாதார சூழ்நிலைகளோடு சம்மந்தப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் பெட்ரோல் விலை தற்போது உயரப்போவதற்கான அறிகுறி தென்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த மே மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை முறையே லிட்டருக்கு ரூ6 மற்றும் ரூ8 எனக் குறைத்தனர். அதன்பிறகு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை கடந்த 7 மாதங்களாக பெட்ரோல் விலை ஒரே மாதிரியே இருந்து வருகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசு பெட்ரோல்/டீசல்களின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்க்கு திடீர் வரியை உயர்த்தியுள்ளது. மத்திய அரசு அதிக லாபத்தின் அடிப்படையில் சில பொருட்களுக்கு திடீர் வரியை விதித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஜனவரி 3ம் தேதி முதல் கச்சா எண்ணெய்க்கான திடீர் வரி ஒரு டன்னிற்கு ரூ1700லிருந்து ரூ2100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது டன்னிற்கு ரூ400 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஜனவரி 3ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய மறைமுக வரி மற்றும் கஸ்ட்ம்ஸ் போர்டு அறிவித்துள்ளது.

இது மட்டுமல்ல இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும். ஹை-ஸ்பீடு டீசல்களுக்கான வரியையும் லிட்டருக்கு ரூ5 லிருந்து ரூ7.5 ஆக உயர்த்தியுள்ளது. ஆனால் பெட்ரோல் மீதான ஸ்பெஷல் கூடுதல் கலால் வரியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கடந்தாண்டு ஜூலை மாதம் தான் கச்சான எண்ணெய்க்கு திடீர் வரியை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது அரசு திடீர் வரியை உயர்த்தியுள்ளதால் கச்சா எண்ணெய்யின் உபபொருளாக வரும் வரும் பெட்ரோல் டீசலுக்கான தயாரிப்பு விலையும் அதிகமாகும். இதனால் இது மக்களுக்கான பெட்ரோல் டீசல் விலையில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் ரூ96-ரூ106 வரை ஒவ்வொரு மாநில வரிக்குத் தகுந்தார் போல பெட்ரோல் விலை விற்பனையாகிறது. டீசலை பொருத்தவரை ரூ89-ரூ94 வரையிலான விலையில் விற்பனையாகிறது.

இந்த விலை விரைவில் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7 மாதங்களாகப் பெரிய மாற்றங்கள் இல்லாத பெட்ரோல், டீசல் விலை தற்போது மீண்டும் உயரப்போகிறது என்ற செய்தி பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.