வேலைக்கு சைக்கிளில் சென்ற கணவன் மனைவி மீது அரசு பஸ் மோதி விபத்து- இருவரும் பலியான பரிதாபம்..

கோவை அடுத்த ஆலந்துறை அருகே உள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் ராஜேந்திரன் (37). இவரது மனைவி தேவி (31). இவர்களுக்கு தர்னிஷ் ,வாசுலேகா இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகின்றனர். இன்று காலை 6 மணி அளவில் துப்புரவு வேலைக்காக ராஜேந்திரன் மனைவி தேவி இருவரும் தங்களது சைக்கிளில் சிறுவாணி சாலையில் வழியாக வேலைக்கு சென்றனர். அந்த சமயத்தில் ஆலந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்த போது காந்திபுரம் நோக்கி வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதி சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்றது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதைப் பார்த்த அந்த சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் .உடனே அரசு பஸ் டிரைவர் குபேரன் பஸ்சை நிறுத்திவிட்டு தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரண் அடைந்தார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த ஆலாந்துறை போலீசார் விரைந்து வந்து இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேலைக்கு சென்ற கணவன் மனைவி மீது அரசு பேருந்து மோதி இருவரும் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து காரணமாக கோவை சிறுவாணி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.