சவுதி அரேபியா ஷெய்பரா தீவில் உருவாகும் மிதக்கும் அதிநவீன ஹோட்டல்-இதுல ஸ்பெஷலே உருண்டையான அறைகள் தானாம்..!

உலகின் அதிநவீன ஹோட்டலாக சவுதி அரேபியாவில் உருவாகிவரும் ஷெய்பரா விடுதியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

ஷெய்பரா தீவில் அமைக்கப்பட்டு வரும் இந்த விடுதி 2024ம் ஆண்டு திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவு சவுதி அரேபியாவிலிருந்து 45 நிமிடங்கள் படகில் பயணம் செய்யும் தூரத்தில் அமைந்துள்ளது.

பிரம்மாண்ட விடுதியின் புகைப்படங்கள் இணையத்தில் தீவிரமாக பரவி வருகின்றன. இந்த அற்புதமான வடிவமைப்பை கில்லா டிசைன் என்ற கம்பனி உருவாக்கியுள்ளந்து.

இந்த புகைப்படங்கள் வைரலாக காரணம் இதிலிருக்கும் உருண்டையான அறைகள் தான்.

அவை வானத்தையும் கடலையும் பிரதிபலிக்கும் விதமாக நீரில் மிதந்துகொண்டு இருக்கும்.

இந்த தெளிவான தண்ணீரின் வழியாக கீழே இருக்கும் பவளப்பாறைகளைக் கூட பார்க்க முடியும்.

இதன் மூலம் இங்கு தங்குபவர்கள் இயற்கைக்கு மிக நெருக்கமாக உணருவார்கள் என்கின்றனர்.

இந்த தீவு அடர்த்தியான சதுப்புநிலங்கள், பாலைவன தாவரங்கள், வெள்ளை மணல் திட்டுகள் கடற்கரைகள் மற்றும் பவளப்பாறைகள் என இயற்கை வளம் மிகுந்த காட்சிகளை வழங்குகிறது.

இந்த விடுதியில் 140 பேர் வரை தங்க வசதிகள் செய்துகொடுக்கப்படுகிறது. இதற்காக 260 வேலையாட்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

சுற்றுபுறத்துக்கு மாசு உண்டாக்காமல் இருக்கும் படி இந்த விடுதி தனக்கு தேவையான மின்சாரத்தை சூரிய மின் சக்தி மூலம் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

மேலும் உப்பு நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் தேவையான நீரை உருவாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

எண்ணெய் வளம் மிகுந்த நாடான சவுதி அரேபியா தொடர்ந்து சுற்றுலாத் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறது.

நியோம் நகரம், இரட்டை கண்ணாடி கட்டடங்கள், செங்கடல் திட்டம் என பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது சவுதி.

சவுதி விசன் 2030 என்ற பெயரில் செயல்பட்டு வரும் இந்த திட்டங்களில் அதிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்.