4 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது..!!

ஊட்டி வடக்கு வன சரகத்துக்குட்பட்ட அரக்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் வடமாநில தொழிலாளா்கள் பலா் குடும்பத்துடன் தங்கி, பணிபுரிந்து வருகின்றனா். கடந்த 10-ந் தேதி, அசாம் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி நிஷாந்த் என்பவரது மகள் சரிதா (4) தேயிலைத் தோட்டத்தில் இருந்தபோது, அங்கு மறைந்திருந்த சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்தாள். படுகாயமடைந்த சரிதா ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வந்தனா். இருப்பினும் அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்திலேயே இருந்தனர். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்காராம் உத்தரவின் பேரில் அரக்காடு பகுதியில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினா் கண்காணித்தனர். அப்போது வனத்துறை சார்பில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பதற்கு வனத்துறையினர் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று சிறுத்தை நடமாட்டம் உள்ள அரக்காடு பகுதியில் 2 இடங்களில் கூண்டுகளை வைத்தனர். அந்த 2 கூண்டுகளில் சிறுத்தைக்கு பிடித்தமான ஆடு ஒன்றையும் கட்டி வைத்து சிறுத்தை வருகைக்காக காத்திருந்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவிலும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து கொண்டே இருந்தனர். எதிர்பார்த்தது போலவே இன்று அதிகாலையில் அரக்காடு பகுதியில் வைத்திருந்த கூண்டின் அருகே சிறுத்தை வந்தது. இதனை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்தனர். மேலும் கூண்டுக்குள் சென்றதும், அதனை பிடிக்கவும் தயாராக இருந்தனர். சிறுத்தையும், கூண்டில் இருந்த ஆட்டை பார்த்தும் உள்ளே நுழைந்தது. இதையடுத்து வனத்துறையினர் சாதுர்யமாக செயல்பட்டு கூண்டை அடைத்தனர். பின்னர் சிறுத்தையை அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட முடிவு செய்தனர். இதற்காக லாரி கொண்டு வரப்பட்டு கூண்டில் சிக்கிய சிறுத்தையை ஏற்றினர். பின்னர் சிறுத்தையை லாரியில் ஏற்றி முதுமலை தெப்பக்காடு வனப்பகுதிக்கு கொண்டு சென்று அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.