காவல் உதவி ஆய்வாளர் பணி: கோவையில் ஆகஸ்ட் 23, 24 இல் உடல் தகுதித் தேர்வு..!

காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு கோவை காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் ஆகஸ்ட் 23, 24 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கோவை மாவட்ட தேர்வு மையத்தின் துணைக் குழுத் தலைவர் வெளியிட்ட அறிக்கை: காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல் திறனறித் தேர்வு கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. தகுதித் தேர்வின் முதல் அணி காலை 6.30 மணிக்கும், இரண்டாம் அணி காலை 7.30 மணிக்கும், மூன்றாம் அணி (காவல் துறை ஒதுக்கீடு) காலை 8.30 மணிக்கும் இத்தேர்வில் கலந்துகொள்ள உள்ளது. இதற்காக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் விண்ணப்பத்தாரர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பு கடிதம் பெறப்படாதவர்கள் இனையதள முகவரியில் அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தோ்வாணையத்துக்கு விண்ணப்பம் அளிக்கும்போது, அனைத்து அசல் சான்றிதழ்களையும் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.