மெரினாவில் கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது மத்திய அரசு.!

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் எழுத்தாற்றலை போற்றும் வகையில், அவருக்கு மெரினா கடற்கரையில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

குறிப்பாக, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கலைஞர் நினைவிட வளாகத்தின் அருகில் கடற்பரப்பினுள் சுமார் 360 மீட்டர் தொலைவில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நினைவு சின்னமானது மூன்று பணித்தளங்களாக பரிசீலிக்கப்பட்டு, அவை கடல்சார் சூழியியல், சமூக பொருளாதார மற்றும் வாழ்வியல் காரணிகளால் ஒப்பீடு செய்யப்பட்டு, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவிட வளாகத்தின் அருகில் கடற்பரப்பினுள் சுமார் 360 மீட்டர் தொலைவில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நினைவுச்சின்னம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவிடத்திலிருந்து சுமார் 650 மீட்டர் நீளமும், 9 மீட்டர் அகலமும் கொண்ட அணுகு பாலத்துடனும், கடற்கரை தரைமட்டம் மற்றும் கடற்பரப்பின் உயர்நீர்மட்டம் (HTL) ஆகியவற்றிலிருந்து சுமார் 6 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படவுள்ளது. இத்திட்டமானது கடலோர ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்குஉட்பட்டு மூன்று பிரத்தியேக பகுதிகளாக வடிவமைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் கடலுக்கு நடுவில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடலுக்கு நடுவில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை தயாரித்து சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு அனுமதிக்காக தமிழ்நாடு அரசு விண்ணப்பித்திருந்தது.

இந்த நிலையில், நிபுணர் குழு 15 நிபந்தனைகளுடன் தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. கடற்படை பாதுகாப்பு தளமான ஐ.என்.எஸ் அடையாரிடம் தடை இல்லா சான்றிதழ் பெறவேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரம்மாண்ட கட்டுமானத்துக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டுள்ளது..