கல்லூரி பேராசிரியரிடம் 18 பவுன் தங்க நகை திருடிய டாக்சி டிரைவர் கைது..!

கோவை : கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சைனி குருடோபெல் (வயது 29)இவர் கோவை பேரூர் அருகே உள்ள பச்சாபாளையத்தில் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். அந்த கல்லூரி குடியிருப்பில் தங்கி உள்ளார்.நேற்று முன்தினம் ( 12ஆம் தேதி) சொந்த ஊரான கடலூருக்கு சென்று விட்டு கோவைக்கு வந்தார். பின்னர் தனியார் கால் டாக்சியை முன்பதிவு செய்து கல்லூரி குடியிருப்புக்கு வந்தார். குடியிருப்புக்கு வந்து பார்த்தபோது பையில் வைத்திருந்த 18 பவுன் நகைகளை காணவில்லை. .இதுகுறித்து பேரூர் போலீசில் புகார் செய்தார்.போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் இந்த திருட்டை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில் டாக்சியில் வரும்போது பச்சாபாளையம் பிரிவு அருகே டிரைவர் டாக்சியை நிறுத்தி  டிக்கியை திறந்து பார்த்ததாக பேராசிரியர் தெரிவித்தார் .இதனால் டிரைவர் மீதும் சந்தேகம் அடைந்த போலீசார் கால் டாக்ஸி டிரைவரை விசாரித்தனர்.அவர்தான் 18 பவுன் நகைகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் கோவை ரத்தினபுரியை சேர்ந்த வினோத் குமார் (வயது 32)என்பது தெரியவந்தது..இவரிடமிருந்த 18 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது .இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.குற்றவாளியை உடனடியாக கைது செய்த தனிப்படை போலீசாரை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பாராட்டினார்..