தமிழகத்தின் முதல் சி.என்.ஜி. மையம்- கோவையில் துவக்கம்..!

மதுக்கரை : மதுக்கரை அடுத்த எட்டிமடை அருகே லட்சுமி பியூல்ஸ் எனும் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளது. இங்கு ஐ.ஓ.சி., நிறுவனம் சார்பில், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சி.என்.ஜி.,), குழாய் வழியே சப்ளை செய்வதற்கான திட்டம் துவக்கப்பட்டது.இதற்காக, பிச்சனூரிலுள்ள சிட்டி கேட் மையத்திலிருந்து, மூன்று கி.மீ., தூரத்திற்கு இரும்பு குழாய் பதிக்கப்பட்டு, மொத்தம் 500 கி.கி., கொள்ளளவுக்கான டேங்குகள் அமைக்கப்பட்டன.நேற்று இதனை, தென்மண்டல குழாய் பதிப்பு திட்ட நிர்வாக இயக்குனர் ஷைலேஷ் திவாரி திறந்து வைத்தார். முதன்மை பொது மேலாளர்கள் விஜயகுமார், யோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிர்வாக இயக்குனர் ஷைலேஷ் திவாரி கூறியதாவது:தமிழகத்தில் முதல் முறையாக இங்கு, சி.என்.ஜி., மையம் திறக்கப்பட்டுள்ளது. விரைவில் இதே பகுதியில், மேலும் இரு இடங்களில் திறக்கப்படும். இம்மையத்திற்கு இரும்பு குழாய் வழியே, 24 மணிநேரமும் எரிவாயு சப்ளை செய்யப்படும்.அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கருத்தில் கொண்டு, திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

புவி அமைப்பை கருத்தில் கொண்டு முதலில், 11 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.நாடு முழுவதும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,) சார்பில், 15 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு குழாய் பொருத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, ஒன்பது லட்சம் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்படும். இயற்கை எரிவாயுவின் பலன்கள் குறித்து, வாகன உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.