ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை – முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி..!

யில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

ஒடிசா மாநிலம் பாலசோரில் நேற்று மாலை 7 மணி அளவில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. 10 முதல் 12 பெட்டிகள் தரம் புரண்டதால் எதிர் தண்டவாளத்தில் விழுந்தன அதைத் தொடர்ந்து பெங்களூரு ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது. இந்த ரயிலில் இருந்த நான்கு பெட்டிகளும் தடம் புரண்டன. இதைத்தொடர்ந்து தடம் புரண்ட பெட்டிகள் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சூழலில் சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஒடிசா தலைமை செயலாளர் பிரதீப் ஜெனுடன் காணொளி வாயிலாக கள நிலவரம் குறித்து அவர் உரையாடினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: ஒடிசா கோர ரெயில் விபத்து நாட்டு மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் ஒடிசாவுக்கு செல்கின்றனர். அவர்கள் அங்கு இருந்து களப்பணி ஆற்றுவர். மூன்று ரெயில்கள் மோதி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்பு கொள்வதற்கும், மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தேன். ரெயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரெயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரண நிதி வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.