மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராயம்… பேருந்தில் கடத்தும் போது போலீசாரிடம் சிக்கிய பலே கில்லாடி சகோதரிகள்..!!

மிழகத்தில் மது பிரச்சினை என்றைக்குமே தீராது என்ற நிலையில் உள்ளது. அதேபோல், அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு மதுபானம் கடத்தி வருவதும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கிடைக்காத மதுபானங்கள் மற்றும் குறைந்த விலைக்கு மதுபானங்களை வாங்கி இங்கு அதிக லாபம் பார்த்து வருகின்றனர்.

இந்த கடத்தலை தடுக்க இருமாநில எல்லையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று அதிகாலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற பேருந்தை மறித்து சோதனை செய்தனர். ஒவ்வொருவரின் உடைமைகளையும் சோதனைக்கு உட்படுத்தினர். இதில் பேருந்தில் 2 பெண்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது, அதில் மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது, இருவரும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அமுதா (50), பூமாதேவி (45) என்பது தெரிய வந்தது. மேலும் இருவரும் சகோதரிகள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதா, பூமாதேவி ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 108 மது பாட்டில்கள் மற்றும் 30 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சாராயம், மதுபானம் கடத்திய சகோதரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.