வருவாயை பெருக்க 6 பேர் கொண்ட அதிரடிக் குழு அமைப்பு!

மாநில வருவாயை அதிகரிப்பதற்காக மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது.மேலும், தமிழகத்துக்கு தேவையான புதிய வருவாய் ஆதாரங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மான்டேக் தலைமையிலான குழு மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த குழுவானது 3 மாதங்களுக்குள் தமிழ்நாட்டி வருவாயை பெருக்குவதற்கான அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த குழுவில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கே. பி. கிருஷ்ணன், அரபிந்த் மோடி, நஜிப் ஷா ( ஐ. ஆர். எஸ். ஓய்வு),  எம். ஏ. சித்திக் ஐ. ஏ.எஸ், சுரேஷ் பாபு ஆகியோர் அடங்குவர்.மாநிலத்தின் மொத்த வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அதனை மேம்படுத்துவது குறித்தும் கொள்கை மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்தும் அரசுக்கு ஆலோசனை வழங்க உள்ளது. மேலும், தமிழகத்தில் வரி ஏய்ப்பு, அரசின் நிர்வாக செயல் திறனில் உள்ள குறைபாடுகள் ஆகியவற்றை சரி செய்யும் நடவடிக்கைகள், மதுபானங்கள் மீதான ஒழுங்குமுறை மற்றும் வரிவிதிப்பு கொள்கையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. தொடர்ந்து, அதன் மூலமாக கிடைக்கும் வருவாயை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசுக்கு இந்த குழுவானது பரிந்துரை செய்ய உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.