தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக இசை சக்ரவர்த்தியாக வாழ்ந்து வருபவர் இளையராஜா. இசைஞானி என்று கொண்டாடப்படும் இளையராஜா பல ஆயிரக்கணக்கான பாடல்களை தன் இசையால் ரசிகர்களுக்கு தந்தவர். 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர். மேஸ்ட்ரோ என்றும் அவர் அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இசை நிறுவனம் சரிகம இந்தியா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மீறி தங்களுக்கு உரிமை இருப்பதாக கூறப்படும் பாடல்களை இளையராஜா தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் அவற்றின் மீது உரிமை கோரி வருவதாகவும் சரிகம நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. தங்களுக்கு உரிமை உள்ள பாடல்களை பயன்படுத்துவது தொடர்பாக இளையராஜாவுக்கு எதிராக ஏற்கனவே டெல்லி ஐ கோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருந்தது. அந்த உத்தரவை இளையராஜா மீறியதாக சரிகம நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை படத்தில் இடம்பெற்ற பொதுவாக என் மனசு தங்கம் பாடல் தொடர்பாக இளையராஜா உரிமை கோரி சட்ட நோட்டீஸ் அனுப்பியதாக சரிகம நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் சில பாடல்கள் ஸ்பாட்டிபை யூடியூப் உள்ளிட்ட தளங்களில் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை இளையராஜா வேண்டுமென்றே மீறியதாக கூறிய சரிகம அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கி அவற்றை விற்பனை செய்து கிடைக்கும் தொகையை சரிகம நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐ கோர்ட் இளையராஜாவிடம் பதில் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இளையராஜா பல ஆயிரக்கணக்கான பாடல்களை இசையமைத்து தந்திருக்கிறார். இசை தேவன் ராக தேவன் என்றும் போற்றப்படும் அவர் தனது இசையில் உருவான பாடல்களுக்கு உரிமம் கேட்டு தொடர்ந்து கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்து வருகிறார். அந்த காப்பிரைட் விவகாரத்தில் சரிமக நிறுவனத்துக்கும் இளையராஜாவுக்கும் தொடர்ந்து பிரச்னை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது..








