மருந்து கட்டுப்பாட்டு வாரியம் மறுசீரமைக்க தனித்தனி அதிகாரிகள் நியமனம்.!!

சென்னை: மருந்து கட்டுப்பாட்டு வாரியம் மறுசீரமைக்கப்பட்டு தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மண்டலமருந்து தரக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் ஏ.ஹபீப் முகமது, மருந்து உரிம அலுவலராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். மருந்துக் கட்டுப்பாட்டு இணை இயக்குநர் எம்.என்.ஸ்ரீதர், தரக் கட்டுப்பாட்டு அலுவலராக (பொறுப்பு) நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர்கள் இருவரும், தாங்கள் ஏற்கெனவே வகித்து வரும் பதவியுடன் கூடுதலாக இப்பொறுப்புகளை கவனிக்க உள்ளனர். இதற்கான அரசாணையை, சுகாதாரத் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ளார்.

அதில், “பொது சுகாதாரத் துறையின் கீழ் இருந்த உணவுப் பாதுகாப்புத் துறையையும், மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தையும் ஒருங்கிணைத்து, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது.

உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் லாவ்லீனாவுக்கு கூடுதலாக மருந்து தரக் கட்டுப்பாட்டு இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டது. துறை ரீதியான நடவடிக்கைகளுக்காக சில புதிய நியமனங்களை மேற்கொள்ளுமாறு அவர் அரசுக்குப் பரிந்துரைத்தார்.

அதைப் பரிசீலித்து ஏ.ஹபீப் முகமது, எம்.என்.ஸ்ரீதர் மருந்து உரிம அலுவலர், தரக் கட்டுப்பாட்டு அலுவலராக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, உணவுப் பாதுகாப்பு ஆணையர் தனித்தனியே மூன்று அதிகாரிகள் கொண்ட குழுக்களை அமைத்து, உரிமம்வழங்குதல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வகை செய்ய வேண்டும். அந்தக் குழுக்கள் அளிக்கும் பரிந்துரைகளின்பேரில், சம்பந்தப்பட்ட நியமன அலுவலர்கள் முடிவுகளை மேற்கொள்ளலாம். அனைத்துமே உணவுப் பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதல் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் இருத்தல் அவசியம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.