இன்று சேலம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் : 12-ம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.!!

சென்னை: அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 3 நாள் சுற்றுப் பயணமாக சேலம் மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று வருகை தருகிறார்.

சேலத்தில் நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின், இம்மாதம் 11 மற்றும் 12-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது சேலம் மாவட்ட சுற்றுப்பயணம் 3 நாட்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதல்வர் ஸ்டாலின் சேலத்துக்கு இன்று (ஜூன் 10) வருகிறார். மாலையில் சேலம் 5 ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், முதல்வர் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக, அண்ணா அறிவாலயம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சேலம் கிழக்கு, மத்திய, மேற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழகச் செயலாளர்கள் பங்கேற்கும் திமுக செயல் வீரர்கள் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது” என்று கூறப்பட்டுள்ளது. இக்கூட்டத்துக்கு, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, நாளை (ஜூன் 11) காலை, சேலம் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தொடர்ந்து, சேலம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பேருந்து நிலையம், நேருகலையரங்கம், பெரியார் பேரங்காடி, மறுசீரமைக்கப்பட்ட போஸ் மைதானம் உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

பின்னர், சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர் திட்டம் உட்பட முடிவுற்ற மற்றும் புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதல்வர் வழங்குகிறார்.

மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக, நாளை மறுதினம் (ஜூன் 12) மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீரை திறந்துவிடுகிறார்.

சேலத்துக்கு 3 நாள் சுற்றுப் பயணமாக முதல்வர் ஸ்டாலின் வரவுள்ள நிலையில், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் மாவட்ட அதிகாரிகளும், முதல்வரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளில் திமுகவினரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.