தனி லிஸ்ட் ரெடி… குஜராத்தில் இருந்து திரும்பியதும்.. அதிரடியில் இறங்கிய ஓபிஎஸ் – அனல் அடிக்கும் தேர்தல் களம்..!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஓபிஎஸ் தனது நிர்வாகிகளுடன் திடீரென ஆலோசனையில் இறங்கியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸின் திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

ஜன. 31ஆம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக உள்ளது. திமுக கூட்டணி சார்பில் இந்த முறையும் ஈரோடு கிழக்கு காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், திமுக கூட்டணி ஏற்கனவே தங்கள் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர். அதேநேரம் அதிமுக கூட்டணியில் இருந்து இன்னும் வேட்பாளர் யார் என்பதிலேயே தெளிவு இல்லை. ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். அவரது ஆதரவு நிர்வாகிகளைக் கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

மறுபுறம் ஓபிஎஸும் தான் வேட்பாளரைக் களமிறக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதேநேரம் கூட்டணிக் கட்சியான பாஜக வேட்பாளரை அறிவித்தால் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாகச் சொல்லியிருந்தார். இதுவரை பாஜக இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. பாஜகவும் கூட இந்தத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுவதாகவே தெரிகிறது. இருப்பினும், அக்கட்சி வெளிப்படையாக இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஓரிரு நாட்களில் பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை எழும்பூரில் அவர் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளார். இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். ஈரோடு கிழக்கு வேட்பாளர் தேர்வு குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

ஓபிஎஸ் தரப்பில் இருந்து 9 பேர் கொண்டு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கில் செல்வாக்காக உள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்களின் பெயர்கள் அதில் இடம் பெற்றுள்ளது. பாஜக இந்தத் தேர்தலில் களமிறங்கவில்லை என்றால்.. இந்த 9 பேரில் இருந்து ஒருவரை வேட்பாளராக அறிவிக்க ஓபிஎஸ் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது குறித்தே இன்றைய தினம் அவர் தனது நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.

இந்த இடைத்தேர்தலை அதிமுக முக்கியமான ஒன்றாகப் பார்க்கிறது. சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் செல்வாக்கு குறைந்து வரும் நிலையில், தனது பலத்தைக் காட்ட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடக்கும் நிலையில், இதில் பெறும் வாக்குகளை மக்களவை தேர்தல் சீட் பேரத்திலும் எதிரொலிக்கலாம் என்பதால் அதிமுக தீவிரமாக உள்ளது. மேலும், அதிமுக வலுவாக உள்ள கொங்கு மண்டலத்தில் தேர்தல் நடக்கும் நிலையில், தனது பலத்தை நிரூபித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.

அதேநேரம் எடப்பாடியைக் காட்டிலும் அதிக வாக்குகளைப் பெற வேண்டும் என்பதில் ஓபிஎஸ் முனைப்பாக உள்ளார். ஏனென்றால், கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் இப்போது எடப்பாடிக்கே ஆதரவாக இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், ஓபிஎஸ் தனது பலத்தை நிரூபிக்க இதில் முழு வீச்சில் இறங்கியுள்ளார். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் சமீபத்தில் அவர் குஜராத்திற்குச் சென்று வந்தார். இந்தச் சூழலில் உடனே தனது நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையில் இறங்கியுள்ளது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.