குடியரசு தினத்தையொட்டி டெல்லி வான் பகுதியில் டிரோன்கள், ஏர் பலூன்கள், பாராகிளைடர்கள் பறக்க தடை..!

குடியரசு தினத்தையொட்டி, ஜனவரி 26-ம் தேதி வழக்கம்போல் டெல்லியில் கோலாகலமான கொண்டாட்டம் பிரமாண்ட அணிவகுப்புடன் நடைபெறுகிறது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, டில்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, சமூக விரோத சக்திகள், பயங்கரவாதிகள் மற்றும் இந்திய விரோத சக்திகள், குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் வகையில், பொதுமக்கள் மற்றும் தலைவர்களை அச்சுறுத்தும் வகையில், ஆளில்லா விமானங்கள், பாராகிளைடர்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்க விடலாம்.

இதைக் கருத்தில் கொண்டு, டில்லி வான்வெளியில் ட்ரோன்கள், பாராகிளைடர்கள், சிறிய ஆளில்லா விமானங்கள், பாராமோட்டர்கள் மற்றும் ஏர் பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 18ம் தேதி முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை மொத்தம் 29 நாட்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும்.இந்த தடையை மீறி யாராவது இந்த பொருட்களை பறக்க விட்டால், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 188ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இதற்கிடையில், குடியரசு தின அணிவகுப்பில் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. பழங்கால 25 பவுண்டர் பீரங்கிகள் 21 குண்டுகளை சுட பயன்படுத்தப்பட்டன. இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 105 மி.மீ. வகை பீரங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த தகவலை மூத்த ராணுவ அதிகாரி பவ்னிஷ் குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 105 மிமீ வகை பீரங்கிகள் 1972 இல் வடிவமைக்கப்பட்டன. இவை கான்பூர் மற்றும் ஜபல்பூரில் உள்ள ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டன. 1984ல் ராணுவத்தில் சேர்க்கப்பட்டன. இந்த பீரங்கிகள் எடை குறைந்தவை.