“ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை”.. போன் சிக்னல் மூலம் 3,095 ரவுடிகளை கொத்தாக அள்ளிய காவல்துறை – டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி.!

சென்னை: தமிழ்நாடு காவல்துறையினரின் ஆபரேசன் மின்னல் ரவுடி வேட்டை நடவடிக்கைக்கு பயந்து வெளி மாநிலங்களில் பதுங்கி உள்ள ரவுடிகளை கண்டுபிடித்து கைது செய்ய டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.

வெளி மாநில ரவுடிகளின் போன் அழைப்புகளை வைத்து அவர்களை பிடித்து சிறையில் தள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை என்ற பெயரில், ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டு உள்ளது. இதுவரை 3,095 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

சட்டம் ஒழுங்கை காக்க காவல்துறையினர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருப்பதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் ரவுடிகளுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

மத்திய உளவுத்துறை மற்றும் மாநில உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மாநிலத்தில் கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து என 10க்கும் மேற்பட்ட ரவுடிகள் மற்றும் ஏ.பிளஸ் கேட்டகிரியில் உள்ள தாதாக்கள், ரவுடிகள், பி மற்றும் பி. பிளஸ் ரவுடிகள் மற்றும் சி பிரிவு ரவுடிகளை கூண்டோடு கைது செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிஜிபி சைலேந்திரபாபுக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மண்டல ஐ.ஜி.க்கள் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் காவல்துறையினரின் நடவடிக்கை தீவிரமானதை தொடர்ந்து ரவுடிகள் பலர் வெளி மாநிலங்களுக்கு தப்பி ஓடி விட்டனர். பெரும்பாலான ரவுடிகள், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தஞ்சம் அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

வெளி மாநில ரவுடிகளுக்கும் தமிழகத்தில் உள்ள ரவுடிகள் அடைக்கலம் தருவதாகக் கூறப்படுகிறது. மஹாராஷ்டிரா, பீஹார் போன்ற மாநிலங்களில், துப்பாக்கிகள் கிடைக்கும் என்பதால் அம்மாநிலங்களுக்கு ரவுடிகள் படையெடுத்து வருகின்றனர். இவர்களில் சிலர் அங்கிருந்தபடியே தனது கூட்டாளிகளுடன் போனில் தொடர்பு கொண்டு குற்றச் செயல்களுக்கு தூண்டுதலாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதுபோன்ற ரவுடிகளை ரகசியமாக கண்காணிக்க வேண்டும். வெளி மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ள ரவுடிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து, ஆறு மாதங்களில், ஜாமினில் வெளிவந்துள்ள ரவுடிகள் குறித்த பட்டியலை காவல்துறையினர் தயாரித்துள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. வெளி மாநில ரவுடிகளின் போன் அழைப்புகளை வைத்து அவர்களை பிடித்து சிறையில் தள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து ரவுடிகள் வேட்டையில் போலீஸ் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

ஆபரேசன் ரவுடி மின்னல் வேட்டை பற்றி காவல்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ள ரவுடிகளை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இவர்களில் சிலர் வெளி மாநிலங்களில் பதுங்கி உள்ளனர். இவர்களை அம்மாநில போலீசார் உதவியுடன் விரைவில் கைது செய்வோம் என்று தெரிவித்துள்ளனர்.