கோவை பேருந்து நிலையத்தில் 320 கஞ்சா சாக்லேட் விற்பனை-வியாபாரி கைது..!

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா, குட்கா வேட்டை நடந்து வருகிறது.இந்த நிலையில் சுல்தான்பேட்டை அருகே உள்ள சித்தநாயக்கன்பாளையம், பஸ் நிறுத்தம் பகுதியில் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சுல்தான்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் விரைந்து சென்று சித்தநாயக்கன்பாளையம் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார்.அவரிடம் கஞ்சா சாக்லேட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் சித்தநாயக்கன்பாளையம் கிழக்கு விதியைச் சேர்ந்த தேவேந்திர குமார் மகன் பப்லு குமார் ( வயது 36)என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 1.600 கிலோ கிராம் எடை கொண்ட 320 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.இவர் அந்த பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார்.இதுகுறித்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இதுபோன்ற போதைப்பொருள் விற்பனையாளர்கள் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் பெயர் ரகசியங்கள் காக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது