அடேங்கப்பா!! தீபாவளி வசூல்… அதிரடியாக இறங்கிய லஞ்ச ஒழிப்பு துறை… அரசு அலுவலகங்களில் மெகா ரெய்டு- சிக்கியது ரூ.1.12 கோடி ரொக்கம்..!

தீபாவளி் பண்டிகை என்றாலே பட்டாசு, வாண வேடிக்கை என சிறுவர்களுக்குக் கொண்டாட்டம் தான். அதேபோல் அரசுத் துறைகளிலும் சில ஊழியர்களும் அதிகாரிகளும் தீபாவளி போன்ற பண்டிகைகள் வந்துவிட்டால் போதும் ; பல்வேறு பணிகளுக்காக அந்தந்த துறையை நாடி வருவோரிடம் லஞ்ச வேட்டை நடத்தத் தொடங்கி விடுவார்கள். இம்முறையும் அது தொடர்ந்ததால் லஞ்ச ஒழிப்புப் போலீசார் மாநிலம் முழுவதும் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருவாரூரில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் விருந்தினர் விடுதியில் அதிரடியாக நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 75 லட்சம் ரூபாய் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடுத்தபடியாக நாமக்கல்லில், நெடுஞ்சாலைத் துறை கோட்ட அலுவலகத்தில் சாலை ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரிகளும், பணம் வசூலிப்பதாக வந்த தகவலையடுத்து நடந்த சோதனையில் கணக்கில் வராத 8 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. விருதுநகரில் மாவட்ட பஞ்சாயத்துகளின் உதவி இயக்குநரிடமிருந்து கணக்கில் காட்டப்படாத 6 லட்சத்து 68 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் கைப்பற்றப்பட்டது. இதுபோல் விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் 4 லட்சத்து 26 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை மாவட்ட தொழில் மையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் பொது மேலாளர் அறையில் இருந்து கணக்கில் வராத 3 லட்சத்து 55 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது ரைஸ் மில் அமைக்க அனுமதி தருவதற்கு பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபோல் ஒசூர் சோதனைச் சாவடிகளில் கணக்கில் வராத இரண்டேகால் லட்சம் ரூபாய் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகையில் ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.