மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்குவது குறித்து ஆய்வு செய்ய மூவர் குழு ஆணையம் அமைப்பு..!

புதுடில்லி : மதம் மாறியவர்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்குவது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.இந்திய அரசியலமைப்பு சாசனம் 1950ல் இயற்றப்பட்டு அவ்வப்போது அதில் திருத்தங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சாசனத்தில், ஹிந்து, சீக்கிய மற்றும் புத்த மதத்தை பின்பற்றும் பட்டியலின மக்களுக்கு மட்டுமே அதற்குரிய சலுகைகள் வழங்கப்படும் எனவும், இவற்றைத் தவிர மற்ற மதத்தை பின்பற்றுவோர் பட்டியலினத்தவராக கருத்தப்பட மாட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், தங்கள் மதத்துக்கு மாறிய பட்டியலின மக்களுக்கும், அவர்களுக்கான சலுகைகள் வழங்க வேண்டும் என முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மத அமைப்புகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கு, பா.ஜ., உட்பட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றன.இதையடுத்து, வரலாற்று ரீதியாக பட்டியலினத்தை சேர்ந்த மதம் மாறியவர்களுக்கு அதற்கான அந்தஸ்து வழங்குவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க, மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையத்தில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டாக்டர் ரவீந்தர் குமார் ஜெயின் மற்றும் பல்கலை மானியக்குழு உறுப்பினர் பேராசிரியை சுஷ்மா யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.