சுவிஸ் வங்கிகளில் ரூ.814 கோடி கருப்பு பணம்: அனில் அம்பானிக்கு வருமான வரித்துறை 2வது நோட்டீஸ்..!

புதுடெல்லி: ‘சுவிஸ் வங்கியில் 2 கணக்குகளில் ரூ.814 கோடி கருப்பு பணத்தை முதலீடு செய்திருப்பது தொடர்பாக ஏன் வழக்கு தொடரக் கூடாது?’

என்று கேட்டு, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும், ரிலையன்ஸ் இன்டஸ்டீரிஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் தம்பியுமான அனில் அம்பானி, சுவிஸ் நாட்டில் உள்ள 2 வங்கிகளில் ரூ.814 கோடி கருப்பு பணத்தை முதலீடு செய்துள்ளார்.

இதன்மூலம், அவர் ரூ.420 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளார். இதை கண்டுபிடித்துள்ள வருமான வரித்துறை, இது தொடர்பாக விளக்கம் கேட்டு இந்த மாத ஆரம்பத்தில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், ‘வெளிநாட்டு வங்கிகளில் உள்ள முதலீடு விவரங்களை மறைத்தது, திட்டமிட்டு வரி ஏய்ப்பில் ஈடுபட்டது ஆகிய குற்றங்களுக்காக, தங்கள் மீது ஏன் வழக்கு தொடரக் கூடாது? என்று கேட்டு, வருமான வரித்துறை நேற்று 2வது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கருப்பு பண சட்டம்-2015ன் 51, 51வது பிரிவுகளின் கீழ் அனுப்பப்பட்டு உள்ள இந்த நோட்டீசுக்கு இம்மாதம் 31ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அனில் அம்பானிக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.