கனடா பல்கலைக்கழகத்தில் மகனுக்கு சீட் வாங்கி தருவதாக கோவை வியாபாரியிடம் ரூ 16.50 லட்சம் மோசடி..!

கோவை அருகே உள்ள வெள்ளலூர், திருவாதிரை கார்டனை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 54) இரும்பு வியாபாரி .இவர் தனது மகனை கனடாவில் உள்ள கேப் பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்க விரும்பினார். அப்போது அவருக்கு சென்னையைச் சேர்ந்த இளம் குமரன் ( வயது 40) என்பவர் அறிமுகமானார் .அவர் தான் கனடா உள்பட பல நாடுகளில் படிப்பதற்கு சீட்டு வாங்கி கொடுத்துள்ளதாகவும், உங்களது மகனை கனடாவில் உள்ள கேப் பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு சீட் வாங்கி தருவதாக கூறினார். அதற்கு பணம் செலவாகும் என்றும் கூறினார். அதை உண்மை என்று நம்பி நாகராஜ் தனது மகனுக்கு கனடாவில் படிக்க சீட் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையில் 16 லட்சத்து 43 ஆயிரத்து 933 ரூபாயை அவரது வங்கி கணக்கில் செலுத்தினார். ஆனால் அவர் சொன்னபடி பல்கலைக்கழகத்தில் படிக்க சீட் வாங்கி கொடுக்கவில்லை .அதோடு பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நாகராஜ் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் இளங்குமரன் மீது நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.