லண்டன்: பிரிட்டன் பிரதமர் தேர்தலில் போட்டியிட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தனது மனைவியுடன் கோ-பூஜை செய்து வழிபாடு செய்தார்.
இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையில் அவரது அமைச்சரவையில் இருந்தவர்கள் தொடர்ந்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனால் வேறுவழியின்றி போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் துவங்கியது.
இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சரான ரிஷி சுனக் உள்பட ஏராளமானவர்கள் போட்டியிட்டனர். பல கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதி போட்டியில் உள்ளனர். செப்டம்பர் 5ம் தேதி நடக்கும் தேர்தலில் பிரதமர் யார்? என்பது தெரியவரும். தற்போது இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது.
துவக்க கால கருத்து கணிப்புகளில் ரிஷி சுனக் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது லிஸ் ட்ரஸ் முன்னிலையில் உள்ளார். இதனால் வெற்றி யார் பக்கம்? என்பதில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் இரண்டு பேரும் தங்களின் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பிரிட்டனில் பிரதமர் வேட்பாளருக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் தான் ரிஷி சுனக் தனது மனைவியான அக்ஷதா மூர்த்தியுடன் சேர்ந்து லண்டனில் ‘கோ பூஜை’ செய்து வழிபாடு செய்துள்ளார். லண்டனில் உள்ள பக்திவேதாந்தா கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தையொட்டி கோ பூஜையை அவர்கள் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதில் பசுவுக்கு அவர்கள் ஆரத்தி எடுத்து வணங்குகின்றனர். முன்னதாக ரிஷி சுனக் பக்தர்களுடன் கலந்துரையாடியபோது, ”எனது கடினமான நேரங்களில் மனைவி அக் ஷதா பகவத் கீதையின் போதனைகளை அனுப்புவார். இது எனக்கு வலிமையை கொடுக்கிறது” என கூறியிருந்தார் என்பதும், பல நேரங்களில் நாடாளுமன்றத்துக்கு பகவத்கீதை புத்தகம் எடுத்து சென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் பிரதமாக போட்டியிடும் ரிஷி சுனக்கின் தாத்தாவும் பாட்டியும் இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். ரிஷி சுனக்கின் தந்தை பெயர் யாஷ்வீர். தாய் உஷா. ரிஷி சுனக்கின் மனைவி பெயர் அக்சதா மூர்த்தி. இவர் கர்நாடகத்தை சேர்ந்த இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மகள். ரிஷி சுனக், அக்சதா மூர்த்தி ஆகியோர் அமெரிக்காவில் படித்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.