ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை விதிப்பு : அமெரிக்காவில் ஆயில் கொள்முதல் செய்ய துவங்கியுள்ளது இந்தியா.!!

ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகள் காரணமாக இந்தியா, அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெயை அதிக அளவில் கொள்முதல் செய்ய துவங்கியுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்தப் போர் இரண்டு ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. உக்ரைன் மீது படையெடுத்ததற்காக ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன.

இந்த தடையானது ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தின. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்நிலையில் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடையை இந்தியா லாவகமாக கையாண்டு, அந்நாட்டிடமிருந்து தொடர்ந்து ஆயிலை இறக்குமதி செய்துவந்தது.

பிற நாடுகள் ரஷ்யாவிடம் ஆயில் கொள்முதல் செய்வதிலிருந்து பின்வாங்கிய நிலையில், கடந்த ஆண்டு ரஷ்ய எண்ணெய் கொள்முதலில் இந்தியா முதலிடத்தில் இருந்தது.

ஆயில் வணிக தரவுகளின் உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளராக இந்தியா உள்ளது. இந்நிலையில் கடல் வழி ரஷ்ய ஆயுள் கொள்முதல் வணிகத்தில் அமெரிக்கா மேலும் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதைத் தொடர்ந்து ஆயில் கொள்முதலை பல்வகைப்படுத்த இந்தியா முன்வந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவிடமிருந்து ஆயுள் கொள்முதலை மேற்கொள்ள இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்த மாதம் ஒரு நாளைக்கு 2,50,000 பீப்பாய்களுக்கும் அதிகமான அமெரிக்க கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வர உள்ளது.

சுமார் 7.6 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் அல்லது ஒரு நாளைக்கு 2,56,000 பீப்பாய்கள் என்ற வீதத்தில் மூன்று மிகப் பெரிய கச்சா கேரியர்கள் (கப்பல்கள்) மற்றும் மூன்று சூயஸ்மாக்ஸ் கப்பல்களில் இந்தியாவுக்கு செல்ல உள்ளதாக கப்பல் கண்காணிப்பு நிறுவனமான கிப்லர் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மேற்கு கடற்கரைக்கு செல்லும் இந்த கப்பல்கள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், விட்டோல், எக்வினார் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் தளத்துக்கு வந்திறங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.