ஆயிரம் விளக்கு பூங்காவில் சிறுமியை கடித்து குதறிய ராட்வீலர் நாய் – அதிர்ச்சி சம்பவம்.!!

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தடை செய்யப்பட்ட ராட்வீலர் நாய்களை வளர்த்து வந்த உரிமையாளர், சிறுமியை அவை கடித்த போது கண்டு கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் புகார் கூறியுள்ளனர்.

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி அருகே பூங்கா ஒன்று செயல்பட்டு வரும் நிலையில் அந்தப் பூங்காவின் பராமரிப்பு பணிகளை காவலாளி ஒருவர் குடும்பத்துடன் அங்கேயே தங்கி இருந்து கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் காவலாளி வெளியூருக்கு சென்ற நிலையில் அவரது மனைவி சோனியா மற்றும் மகள் சுபிக்ஷா ஆகியோர் பூங்காவிலேயே இருந்துள்ளனர்.

அதிர்ச்சி சம்பவம்: இந்த நிலையில் இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் தான் வளர்க்கும் ராட்வீலர் வகை நாய்களுடன் பூங்காவுக்கு நடை பயிற்சிக்கு வந்துள்ளார். அப்போது புகழேந்திடமிருந்து பாய்ந்து சென்ற இரு நாய்களும், அங்கு விளையாடிக் கொண்டிருந்த சுபிக்ஷாவை கடித்து குதறியது. மிகக் கொடூரமாக சுபிக்ஷா நாய்களால் கடிபட்ட நிலையில் அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை அடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த சோனியாவையும் நாய்கள் கடித்து குதறியதாக கூறப்படுகிறது.

சிகிச்சை: இதில் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் அருகில் இருந்தோர் நாய்களை விரட்ட முயன்றும் அது முடியாமல் போனது. அதே நேரத்தில் நாய்கள் கடிப்பதை புகழேந்தி தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தொடர்ந்து ஒரு வழியாக அங்கிருந்தவர்கள் நாய்களை விரட்டிவிட்டு சிறுமையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் தற்போது மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

உரிமையாளர் கைது: இதற்கிடையே புகழேந்தி மீது இரண்டு பிரிவுகளுக்கு வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். புகழேந்தி வளர்த்து வந்தது தடை செய்யப்பட்ட ராட்வீலர் இன நாய்கள் என தெரியவந்துள்ளது .ஏற்கனவே பலரை இந்த வகை நாய்கள் கடித்து குதறிய நிலையில் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. இதற்காக தான் இந்த வகை நாய்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன.

நாய்களுக்கு தடை: இந்தியாவில் பிட்புல், ராட்வீலர், புல்டாக், உள்ஃப் நாய்கள் மற்றும் டெரியர் உள்ளிட்ட ஆக்ரோஷ தன்மை கொண்ட 24 வெளிநாட்டு இன நாய்களின் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு கடந்த ஆண்டு அறிவுறுத்தியது. மேலும், வீடுகளில் ஏற்கனவே வளர்க்கப்பட்டு வரும் அத்தகைய இன நாய்களுக்கு கருத்தடை செய்யுமாறும் பரிந்துரைக்கப்பட்டது. மனிதர்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புகழேந்தி வளர்த்த நாய்களுக்கு கருத்தடை செய்யப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.