காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை தாக்க முயன்ற கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்திய தந்தை மீது வழக்கு..!

கோவை போத்தனூர் அருகே உள்ள பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் 24 வயது வாலிபர். கட்டிட தொழிலாளி.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 16 வயதான பிளஸ்-2 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது மகளை கண்டித்தனர். பின்னர் வீட்டை மாற்றி வேறு ஒரு பகுதிக்கு சென்றனர். இதனையடுத்து மாணவி கட்டிட தொழிலாளியிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார். இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் மாணவிக்கு மற்றொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் கட்டிட தொழிலாளிக்கு தெரிய வந்தது. சம்பவத்தன்று மாணவி பள்ளி முடிந்ததும் டவுன் ஹாலில் இருந்து பஸ்சில் வீட்டிற்கு சென்றார். அந்த பஸ்சில் கட்டிட தொழிலாளி ஏறினார். அவர் மாணவியின் அருகே சென்று ஏன் என்னை காதலிக்க மறுக்கீறாய் என கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கட்டிட தொழிலாளி மாணவியை தாக்க முயன்றார். இதனை பார்த்த பஸ்சில் இருந்தவர்கள் அவரை சமாதானம் செய்தனர்.

மாணவி வீட்டிற்கு சென்றதும், அவரது தோழிகள் நடந்த சம்பவங்களை மாணவியின் தந்தையிடம் கூறினார். இதனால் கட்டிட தொழிலாளி மீது மாணவியின் தந்தைக்கு ஆத்திரம் ஏற்பட்டது. பின்னர் அவர் கத்தியுடன் கட்டிட தொழிலாளியின் வீட்டிற்கு சென்றார். அங்கு இருந்த அவரின் முதுகில் கத்தியால் குத்தி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த கட்டிட தொழிலாளியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து மாணவியின் தந்தை போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை தாக்க முயன்ற கட்டிட தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே போல கட்டிட தொழிலாளி அளித்த புகாரின் பேரில் அவரை கத்தியால் குத்திய மாணவியின் தந்தை மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.