கர்நாடகாவில் இருந்து சத்தியமங்கலம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதி நடுவழியில் தப்பி ஓட்டம்..!

சத்தியமங்கலம்: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியைச் சேர்ந்தவன் சுரேஷ் (எ) சூரப்பா. இவன் மீது கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் காவல் நிலையம் மற்றும் தமிழக பகுதியில் உள்ள தாளவாடி மற்றும் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளது. ஒரு திருட்டு வழக்கில் சாம்ராஜ்நகர் மாவட்ட சிறையில் இருந்த சூரப்பாவை கர்நாடக போலீசார் புஞ்சைப் புளியம்பட்டி பகுதியில் நடைபெற்ற கொள்ளை வழக்கு சம்பந்தமாக சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கர்நாடகா அரசு பஸ்ஸில் அழைத்து வந்தனர். ஆசனூர் பகுதியில் உணவு அருந்துவதற்காக பஸ்ஸில் இருந்து கீழே இறங்கிய போது சூரப்பா சிறுநீர் கழித்து விட்டு வருவதாக போலீசாரிடம் கூறியதால் போலீசார் அவன் கையில் மாட்டியிருந்த கைவிலங்கு பூட்டை திறந்து விட்டுள்ளனர். இதையடுத்து நைசாக சென்ற சூரப்பா அப்பகுதியில் உள்ள நீரோடை புதர்மறைவில் தப்பியோடி தலைமறைவானான். அதிர்ச்சி அடைந்த கர்நாடகா போலீசார் உடனடியாக ஆசனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இரு மாநில போலீசாரும் இணைந்து தப்பியோடி தலைமறைவான சுரேஷ் என்கிற சூரப்பாவை தேடி வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பகுதி என்பதால் சுரேஷ் வனப்பகுதிக்குள் சென்று இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக போலீசார் வனத்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். இதை அடுத்து வனப்பகுதியில் வந்து சென்றுள்ள வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வனப்பகுதியில் சூரப்பா நடமாடுகிறானா என தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..