இனி ராவி நதிநீர் பாகிஸ்தானுக்கு செல்லாது – இந்தியாவுக்கே சொந்தமானது.!!

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ராவி நதி ஓடுகிறது. இந்த நதி இந்தியாவுக்கு சொந்தமானது. எனினும், இந்நதியில் இருந்து குறிப்பிட்ட அளவு நீர் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்தது.

இந்த நதியின் குறுக்கேஷாபூர் கண்டி தடுப்பணையை கட்டும் பணியை இந்தியா மேற்கொண்டு வந்தது. பல்வேறு சிக்கல்களால் அதன் கட்டுமானம் தாமதமானது. பின்னர் கடந்த 2018-ம்ஆண்டு மீண்டும் தடுப்பணை கட்டுமானம் தொடங்கப்பட்டது. தற்போது அதன் கட்டுமானம் முழுமை அடைந்துவிட்டதாகவும், இனி ராவி நதிநீர் பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ராவி நதி பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் எல்லையை ஒட்டி செல்கிறது. தற்போது பாகிஸ்தானுக்கான நீர் ஓட்டம் தடுக்கப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு கூடுதலாக 1,150 கன அடி தண்ணீர் கிடைக்கும் என்றும் இதன் மூலம், ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள 32 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் பயன்பெறும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 1960-ம் ஆண்டில் இந்தியா – பாகிஸ்தான் இடையே சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, ராவி, சட்லெஜ், பியாஸ் ஆகிய 3 நதிகள் மீதான உரிமை இந்தியாவுக்கும், சிந்து, ஜீலம், செனாப் ஆகிய 3 நதிகள் மீதான உரிமை பாகிஸ்தானுக்கும் வழங்கப்பட்டது.