புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு திடீர் சர்ப்ரைஸ் விசிட் அடித்த பிரதமர் மோடி..!

புதுடெல்லி: நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி சர்ப்ரைஸ் விசிட் மேற்கொண்டு, பணிகளை ஆய்வு செய்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ஆங்கிலேயர் ஆட்சியில் கவுன்சில் ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடம், வைஸ்ராய் லார்ட் இர்வினால் கட்டப்பட்டது. இது, சுமார் 96 வருடங்களுக்கு முன் ஜனவரி 18-ல் திறக்கப்பட்டு இன்று வரை செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் கூடுதல் வசதிகளுக்காக புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கு கடந்த 2020 டிசம்பரில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நாடாளுமன்ற கட்டிடம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

‘சென்ட்ரல் விஸ்டாஸ்’ எனும் பெயரில் மத்திய அமைச்சகங்களின் அலுவலகங்கள் கொண்ட கட்டிடங்களை டாடா நிறுவனம் நிர்மாணித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் அமைகிறது. பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடப் பணிகளை கடந்த நவம்பரில் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இதன் பணிகள் முடிவடைய மேலும் சில மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிட கட்டுமான பணிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். சுமார் 1 மணி நேரம் பிரதமர் கட்டிடத்தை பார்வையிட்டதாக தகவல். பிரதமர் உடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் பணிகளை பார்வையிட்டுள்ளார். அப்போது கட்டுமான தொழிலாளர்களுடனும் பிரதமர் மோடி பேசி உள்ளார்..